செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்ட அனுமதி கூடலூர் வன அலுவலர் தகவல்


செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்ட அனுமதி கூடலூர் வன அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 14 July 2017 3:47 AM IST (Updated: 14 July 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் அங்கன்வாடி மையத்துக்கு கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்படும் என்று கூடலூர் வன அலுவலர் திலிப் கூறினார்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இங்கு ஏராளமான ஆதிவாசி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. குறிப்பாக மின்சாரம் இன்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் முதன் முறையாக செம்பக்கொல்லி ஆதிவாசி மக்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றுக்கும், மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சூரிய சக்தியில் செயல்படும் மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு வந்தது. ஆனால் சூரிய சக்தி மூலம் தேவைக்கு ஏற்ப குடிநீர் எடுக்க மோட்டாரை இயக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது மின் இணைப்பு வழங்கப்பட்டதால், மின் மோட்டாரை இயக்கி அவர்கள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இதன் மூலம் ஆதிவாசி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த பெள்ளன் (வயது 60) என்ற ஆதிவாசியை காட்டு யானை தாக்கி கொன்றது. இதையொட்டி கூடலூர் வன அலுவலர் திலிப் தலைமையிலான வனத்துறையினர் செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்துக்கு சென்றனர். பின்னர் இறந்து போன பெள்ளன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து ஆதிவாசி மக்களை வன அலுவலர் திலிப் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது ஆதிவாசி மக்கள் சங்க தலைவர் சுரேஷ் தலைமையிலான கிராம மக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- முதன் முறையாக செம்பக்கொல்லி கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் தெருவிளக்குகள் பொருத்துவதற்கு மின்சாரம் வழங்கப்பட வில்லை. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட அனுமதி அளிக்க வேண்டும். தற்போது ஒரு கிணறு இருக்கின்ற நிலையில் மற்றொரு கிணறு தோண்டவும் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதை கேட்ட வன அலுவலர் திலிப் கூறும் போது, அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்த உடன் அனுமதி அளிக்கப்படும். தெருவிளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும் ஆதிவாசி மக்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் எந்த நேரத்திலும் வனத்துறையை அணுகலாம் என்றார். அப்போது வனச்சரகர் கணேசன், வன காப்பாளர் சித்தராஜ் மற்றும் வனத்துறையினர், ஆதிவாசி மக்கள் உடன் இருந்தனர்.

Next Story