பைசன்வாலி குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் புகுந்த காட்டுயானைகள் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


பைசன்வாலி குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் புகுந்த காட்டுயானைகள் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 14 July 2017 4:19 AM IST (Updated: 14 July 2017 4:18 AM IST)
t-max-icont-min-icon

மூணாறை அடுத்துள்ள பைசன்வாலி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட முட்டுக்காடு, கொங்கினிசிட்டி, சொசைட்டிமேடு பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

மூணாறு,

விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதோடு, வீடுகளையும் சேதப்படுத்தி செல்கின்றன. இதனை வனத்துறையினர் விரட்டும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் காட்டு யானைகள் அட்டகாசத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் பைசன்வாலி 300 ஏக்கர் பகுதியில் குட்டியுடன் காட்டு யானைகள் புகுந்தன. குடியிருப்பு பகுதிகளில் அவை சர்வசாதாரணமாக உலா வந்தன.

இதைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சத்தம் எழுப்பி காட்டுயானைகளை விரட்டினர். இதனால் மிரண்டு ஓடிய அவை அருகில் இருந்த தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.

சுமார் ஒரு மணி நேரம் முகாமிட்டிருந்த அவை, பின்னர் தானாக வனப்பகுதிக்குள் சென்றன. தொடர்ந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விவசாய தோட்டங்களுக்குள்ளும் புகாமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story