போதிய அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் மாற்று பயிர்களை பயிரிட வேண்டும்


போதிய அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் மாற்று பயிர்களை பயிரிட வேண்டும்
x
தினத்தந்தி 14 July 2017 5:06 AM IST (Updated: 14 July 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

பத்ரா அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக மாற்றுப் பயிர்களை பயிரிட வேண்டும் என்று பத்ரா அணை நீர் பயன்பாட்டு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டத்தில் துங்க பத்ரா ஆற்றின் கிளை ஆறான பத்ரா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பத்ரா அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தாவணகெரே மாவட்டம் வரை செல்கிறது. இதன்மூலம் சுமார் 1.60 எக்டேர் நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பத்ரா அணையால் சிவமொக்கா மற்றும் தாவணகெரே மாவட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த அணையின் கொள்ளளவு 71.53 டி.எம்.சி. நீர் ஆகும்(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி நீர்).

இந்த நிலையில் கடந்த ஆண்டு கர்நாடகத்தில் பருவமழை பொய்த்துவிட்டது. அதேபோல் சிவமொக்கா மாவட்டத்திலும் மழை அதிகமாக பெய்யவில்லை. இதனால் கடந்த ஆண்டு சிவமொக்கா மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் கர்நாடகத்தில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன்காரணமாக இந்த ஆண்டும் பத்ரா அணை நிரம்பவில்லை. பத்ரா அணையில் தற்போது 18.37 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்ரா அணை நீர் பயன்பாட்டு வாரிய தலைவர் சுந்தரேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கர்நாடகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதம் 2–வது வாரத்தைக் கடந்தும் இன்னும் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயத்திற்கு திறந்துவிடும் அளவிற்கு அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லை.

இதன் காரணமாக விவசாயிகள் இந்த ஆண்டு நெல் பயிரிடுவதற்கு பதிலாக கேழ்வரகு போன்ற மாற்று பயிர்கள் ஏதாவது ஒன்றை பயிரிட்டு விவசாயம் செய்ய முன்வரவேண்டும்.

பத்ரா அணைக்கு தற்போது வினாடிக்கு 1,641 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. மாற்று பயிர்கள் பயிரிடுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆலோசனைகள் பெறலாம்.

சிவமொக்கா மாவட்டத்தில் ஹிரேகேரூர், ராணேபென்னூர், ஹொன்னாளி ஆகிய பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் 620 எக்டேர் நிலத்தில் மாற்று பயிர்களை பயிரிட இலவசமாக விதைகள் வினியோகிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நெற்பயிருக்காக 100 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் இல்லாதது பெரும் கவலை அளிக்கிறது. பருவமழை இனிமேலும் பெய்யாமல் இருந்தால் அரிசியின் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் உள்ளது. அரிசி கிடைக்காமல் பொதுமக்கள் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

ஆகஸ்டு மாதம் வரை கேழ்வரகு பயிரிட வாப்புள்ளது. ஆகஸ்டு மாதத்திற்கு மேலும் மழை வராவிட்டால் விவசாயிகள் செப்டம்பர் மாதத்தில் பாசி, உளுந்து, காராமணி போன்ற பயிர்களை விளைவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story