பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரவில்லை
குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வருவதில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
மைசூரு,
தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்த மதக்கலவரம் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத அரசாக, மாநில அரசு உள்ளது. மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதனால் மாநில மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர்.
பெங்களூருவில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரவில்லை.
மத்தியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுத்து வருகிறார். அவர் ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்களும் பா.ஜனதா ஆட்சியின் மீது அதிக நம்பிக்கை வைத்து உள்ளனர்.கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க போவது உறுதி. மைசூருவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பா.ஜனதா தொண்டர்கள் தூய்மை பாரதத்தின் கீழ் நகரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.