புதைமின் வடம் அமைக்கும் பணி நாராயணசாமி தொடங்கிவைத்தார்
புதுவை அரசின் திட்ட அமலாக்க முகமை மூலம் புதுவை பிராந்தியத்தில் உள்ள கடலோர பகுதிகளில் பேரிடர்கால இழப்பை குறைக்க உலக வங்க நிதியின்கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி,
இதன் ஒரு பகுதியாக முதலியார்பேட்டையில் முத்துபிள்ளை நகர் முதல் அப்துல்கலாம் நகர் வரையிலும், பொதுப்பணித்துறை குடியிருப்பு முதல் தேங்காய்த்திட்டு மெயின்ரோடு வரை புதை மின்வடம் (கேபிள் வயர்கள்) ரூ.15 கோடியே 56 லட்சம் செலவில் புதைக்கப்பட உள்ளன.
இந்த பணிகளின் தொடக்கவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜெயமூர்த்தி, பாஸ்கர், திட்ட அமலாக்க முகமையின் திட்ட இயக்குனர் பார்த்திபன், உதவி திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த பணி முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், உப்பளம் தொகுதியில் 25 கி.மீ. நீள சாலையில் மின்சார கேபிள் பதிக்கப்படுவதால் பேரிடர் காலங்களில் பொதுதுமக்கள் குறைந்த நேர தடையுடன் மின்வினியோகம் பெற்று பயனடைவர். புதைமின்வடம் பதிக்க தோண்டப்படும் சாலைகள் உடனுக்குடன் அதன் அமைப்பிற்கேற்ப சீர் செய்யப்படும்.