அழகை கூட்டும்... உடலை காக்கும்...!


அழகை கூட்டும்... உடலை காக்கும்...!
x
தினத்தந்தி 14 July 2017 3:30 PM IST (Updated: 14 July 2017 3:30 PM IST)
t-max-icont-min-icon

முடியை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. உச்சந்தலை முதல் உடல் முழுவதும் ரோமங்கள் இருக்கின்றன. அவை தேவையற்ற ஒரு பொருளல்ல. அவை உடலின் நலன் காக்கின்றன. நம் தோற்றப் பொலிவை கூட்டுகின்றன.

முடியைப் பற்றிய சுவாரஸ்யமான சங்கதிகளை இந்த வாரம் அசைபோடுவோம்...

* பாலூட்டி உயிரினங்களின் ஒரு ஆடையாளமாகவே ரோமங்கள் கருதப்படுகின்றன. கெரட்டின் எனும் புரதப் பொருளால் ஆனது ரோமம்.

* தோலின் அடிப்பகுதியில் இருந்து ரோமங்கள் வளர்கின்றன.

* ரோமம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. மேலடுக்கு கியூடிகிள் என்றும், உள் அடுக்கு கார்டெக்ஸ் என்றும், நடு அடுக்கு மெடுல்லா என்றும் அழைக்கப்படுகிறது.

* உயிரினங்களின் உடலில் பொதுவாக 2 வகை ரோமங்கள் வளர்கின்றன. அவை வெல்லஸ் ரோமம் மற்றும் டெர்மினல் ரோமம்.

* குழந்தைப் பருவத்தில் உடல் முழுவதும் வளர்ந்திருக்கும் ரோமங்கள் வெல்லஸ் ரோம வகையைச் சார்ந்தது. இவை குட்டையாகவும், வெளிர் நிறத்திலும், மென்மையாகவும் காணப்படும். உடல் மூப்பு அடைந்த பின்னர் இந்த ரோமங்கள் மறைந்துவிடும்.

* பெரியவர்களின் உடலில் காணப்படும் தடித்த, முதிர்ச்சி அடைந்த ரோமங்கள் டெர்மினல் ரோமங்களாகும். இவை நீளமாகவும், அடர்நிறத்திலும் காணப்படும். தலை, மார்பு போன்ற பகுதிகளில் மிகுதியாக டெர்மினல் ரோமங்கள் காணப்படுகின்றன.

* உள்ளங்கை, கால்களில் பாதம், உதடு, கருவிழி தவிர்த்து உடலின் பெரும்பாலான பகுதிகளில் ரோமங்கள் வளர்கின்றன.

* தலையில் இருக்கும் முடி வெப்பக் காப்பு பொருளாகவும், குளிர்ச்சி பராமரிக்கும் கவசமாகவும் விளங்குகிறது. சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்களை தடுக்கும் திறன் ரோமங்களுக்கு உண்டு. உடைகள் அணியாத விலங்குகளுக்கு முழு உடலின் கவசமாகவும் இருப்பவை ரோமங்களே. அவையே விலங்குகளை வெப்பத்திலிருந்தும், அதிக குளிரிலிருந்தும் அவற்றை காக்கின்றன.

* வட்ட வடிவ ரோம இழையைக் கொண்ட ரோமம் நேரான முடியாக வளர்கிறது. ஒழுங்கற்ற வடிவ ரோம இழைகளே சுருள் முடிகள் வளர காரணமாகின்றன.

* இரண்டு வித நிறமிகளே முடியின் நிறத்தை தீர்மானிக்கின்றன. இமெலானின் நிறமி கருப்பு, பழுப்பு மற்றும் பொன்னிற முடிகள் வளர காரணமாக இருக்கிறது. ஹியோமெலானின் நிறமிகள், சிவப்பு நிற ரோமம் வளர காரணமாகிறது. நிறமிகளின் அளவு அதிகரிப்பதற்கேற்ப நிறத்தின் அடர்த்தியும் வேறுபடுகிறது.

* இமை முடிகள் தூசு, வியர்வை மற்றும் மழை உள்ளிட்ட காரணிகளில் இருந்து கண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. கவலை, கோபம், வியப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்போதும் இமை முடிகள் செயல்படுகின்றன.

* சராசரியாக முடி வளரும் வேகம் மாதத்திற்கு 1½ சென்டிமீட்டர் ஆகும். மனித முகத்தில் உள்ள முடிகளே, மற்ற அனைத்து ரோமங்களைவிடவும் வேகமாக வளர்கின்றன.

* தலையில் இருந்து சராசரியாக தினமும் 50 முதல் 100 முடிகள் உதிர்கின்றன. இது அனைவருக்கும் பொதுவானது. முடிகொட்டுவதாக கவலைப்படுபவர்களுக்கு இதைவிட அதிக எண்ணிக்கையில் முடிகள் உதிர்கின்றன. வழுக்கைத் தலை மரபணு குறைபாட்டால் ஏற்படுகிறது.

* தலைவாறுவதற்காக சீப்புகளை பையில் வைத்துக் கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது. மன்னர் ஜூலியஸ் ஜீசர், தனது கிரீடத்தில் சீப்பை சொருகி வைத்திருப்பாராம்.

* ராணுவத்தினர் முடியை குட்டையாக வெட்டிக் கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் மாவீரர் அலெக்சாண்டர் ஆவார். தனது படைவீரர்கள் எதிரிகளிடம் போரிடும்போது சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவர் முடியை ஒட்ட வெட்ட கட்டளையிட்டிருந்தார். இன்று பல நாடுகளும் அந்த முறையை பின்பற்றுகின்றன. ஒழுக்கம் கருதி சிகை அலங்காரம் செய்பவர்களும் குட்டையாக முடி வெட்டிக்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

* அமெரிக்கர்களிடம் நீளமாக முடி வளர்க்கும் ஆர்வம் இருக்கிறது. இன்றைய தலைமுறையினரிடமும் அதிகம் முடி வளர்க்கும் ஆர்வமும், விதவிதமாக சிகையலங்காரம் செய்யும் ஆர்வமும் பெருகி உள்ளது.

* ஆப்பிரிக்க வெயிலில் தாக்குப் பிடிக்க முடியாத, அதிகமாக முடி கொட்டிய ஒருவகை மனித இனமே இடம் பெயர்ந்து மற்ற கண்டங்களில் வசிக்கத் தொடங்கியதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

* இங்கிலாந்தில் 13-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டின் பாதி வரை, முடிதிருத்துனர்கள், நர்ஸ் போல மருத்துவ சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். முடியை ஒழுங்குபடுத்துதல், ரத்தப்போக்கின்போது கட்டுப்போடுதல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ‘பிளேடை’ முறையாக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அந்தப் பணி வழங்கப்பட்டது. அதனால் மருத்துவர்களுக்கு நிகராக அவர்கள் மதிக்கப்பட்டார்கள். 1745க்குப் பிறகு இந்த வழக்கம் மாற்றப்பட்டது.

* அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்க இனத்தவர்களை, அவர்களது எஜமானவர்கள் அனைத்து வேலைகளுக்கும் பழக்கப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு முடிவெட்டி சம்பாத்தியம் செய்வதையும் அனுமதித்தனர். பெரும்பாலான அடிமைகளுக்கு முடிவெட்டுதல் இரண்டாம் தொழிலாகவும், தனது குடும்பத்தின் வருவாயை ஈடு செய்யும் தொழிலாகவும் விளங்கியது. 1800 காலகட்டத்தில் அமெரிக்காவில் முடி திருத்தகம் நடத்தியவர்களில் 96 சதவீதம் பேர் ஆப்பிரிக்க அடிமை இனத்தவர்கள்தான்.

* கிங் ஜில்லட் என்னும் பயண வியாபாரியே எளிதாக முகம் மழிக் கும் சவர ரேஸரை தயாரித்து விற்றார். ஒவ்வொருவரும் சுயமாக ஷேவ் செய்து கொள்ள இந்த கருவி உதவு கிறது.

*பாரீஸ் நகரைச் சேர்ந்த மார்செல் கிராட்டியு என்ற பெண்மணிதான், நேரான முடிகளை சுருள வைத்து அழகுபடுத்தும் முறையை கண்டறிந்தார். 

Next Story