மாவீரனின் அதிர்ஷ்ட ‘தேவதை’


மாவீரனின் அதிர்ஷ்ட ‘தேவதை’
x
தினத்தந்தி 14 July 2017 3:44 PM IST (Updated: 14 July 2017 3:44 PM IST)
t-max-icont-min-icon

குடியரசுக்கு விடைகொடுத்து விட்டு பிரெஞ்சு பேரரசனாக முடிசூடிக்கொண்ட நெப்போலியன், ஜோஸ்பீனை பேரரசியாக அமரச்செய்து அழகு பார்த்தான்.

ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன், ‘அலெக்ஸாண்டர் தி கிரேட்.’ சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் தந்த மாவீரன், ‘நெப்போலியன் பொனபார்ட்.’

அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால்.. நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரளயம். இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும், ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது.

ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிரான்சு நாட்டின் அரசனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் நெப்போலியன். உலக வரலாற்றிலேயே, ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதலும் கடைசியும். ஒரு சாமானியன் சக்கரவர்த்தியான சரித்திரம் அது. அதன் காரணமாகத்தான் அவருக்கு ‘விதியை வென்ற நெப்போலியன்’ என்ற அடைமொழிப் பெயர் வந்தது.

1769-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி, பிரான்சின் கோர்சிக்காவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன். அவரோடு சேர்த்து அவரது குடும்பத்தில் மொத்தம் 13 பிள்ளைகள். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாதவனாக வளர்ந்தார். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும், பாரீசிலும் உள்ள ராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள்.

பள்ளி காலத்தில் தனிமையை விரும்பிய நெப்போலியன், பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து, பிரெஞ்சு ராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். ‘டுலால்’ நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியனுக்கு படைத் தளபதியாக பதவி உயர்வு கிடைத்தது. 1796-ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்த பிறகு, அவரது புகழ் தேசிய அளவில் உயர்ந்தது. பின்னர் பாரீசில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு, வேறு இருவருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

ஒரு சாதாரண படைவீரனாய் இருந்து, தன் பேராற்றலால் படைத் தலைவனாக உயர்ந்து, பிரான்சு புரட்சியின் விளைவுகளைத் தனக்கு சாதகமாக பயன் படுத்தி அந்நாட்டின் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டவர், நெப்போலியன். அந்த சமயத்தில் நாட்டில் அடிக்கடி கலவரங்கள் ஏற்பட்டன. அதனால் அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்காக, மக்களிடமிருந்த ஆயுதங்களை பறிக்க ஆணையிட்டார். அப்போது தான் நெப்போலியனின் வரலாற்றில் காதல் கதை எழுதப்பட்டது.

ஒரு நாள் ஈஜிள் என்ற 12 வயது இளைஞன், நெப்போலியனிடம் வந்து நின்றான். கிலட்டின் தலைவெட்டி கருவிக்கு பலியான, தனது தந்தையின் வாளை அவர் நினைவாக வைத்திருக்க தன்னிடம் தரும்படி வேண்டினான். மனமிரங்கிய நெப்போலியன், அந்த வாளை எடுத்துவரச் சொல்லி, அவனிடம் தந்து வாழ்த்தி அனுப்பினான்.

நெப்போலியனின் பெருந்தன்மையை பாராட்ட, ஈஜிளின் தாய் ஜோஸ்பீன் நேரில் வந்தாள். முதல் சந்திப்பிலேயே இருவரது விழிகளும் சங்கமித்துக் கொண்டன. உள்ளூர் கலவரங்களையும், பல போர்முனை தாக்குதல்களையும் எளிதாக சமாளித்த நெப்போலியன், ஜோஸ்பீனின் கண் பார்வை தாக்குதலில் கொஞ்சம், இல்லை.. இல்லை... நிறையவே தடுமாறித்தான் போனான்.

ஜோஸ்பீன் ஒரு விதவை. இரண்டு பிள்ளைகளுக்கு தாய். நெப்போலியனை விட வயதில் மூத்தவள். இருப்பினும் இளமை கொஞ்சமும் கலையாத பேரழகுப் பெட்டகம்.

கால ஓட்டத்தில் அவர்களின் காதலும் வளர்ந்தது. இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். குடியரசுக்கு விடைகொடுத்து விட்டு பிரெஞ்சு பேரரசனாக முடிசூடிக்கொண்ட நெப்போலியன், ஜோஸ்பீனை பேரரசியாக அமரச்செய்து அழகு பார்த்தான். வசந்தம் மிகுந்த அவர்களின் காதல் வாழ்க்கை 15 வருடங்களை கடந்து ஓடியது.

ஜோஸ்பீனுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருந்ததனாலோ.. என்னவோ? நெப்போலியனின் குழந்தை விஷயத்தில் இயற்கை வஞ்சித்தது. தனக்குப் பின்னால் ஆட்சியில் அமர நெப்போலியனுக்கு ஒரு வாரிசை பெற்றுத்தர ஜோஸ்பீனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, ஜோஸ்பீனை விவாகரத்து செய்த நெப்போலியன், ஆஸ்திரிய இளவரசி மரிய லூயிசாவை மணம் முடித்தான். நெப்போலியன் மீது தீராத காதல் கொண்டிருந்த ஜோஸ்பீனும், அவனது நலன் கருதி விலகிக் கொண்டாள். உடல்கள்தான் விலகி இருந்ததே தவிர, உள்ளம் ஒருவரையொருவர் தேடிக்கொண்டே இருந்தது.

ஜோஸ்பீனை விட்டு விலகியதாலோ என்னவோ?, நெப்போலியனின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் ஒட்டிக்கொண்டது. ஒட்டுமொத்த ஐரோப்பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துசேர்ந்த நிலையில், இங்கிலாந்து மட்டும் முரண்டு பிடித்தது. இதனால் இங்கிலாந்தை பணிய வைப்பதற்காக, கிடுக்குப்பிடியான வர்த்தக முறையை நெப்போலியன் அறிமுகம் செய்தார். அதன்படி ‘பிரான்சின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த நாடும் இங்கிலாந்துடன் எவ்வித வர்த்தகமும் புரியக்கூடாது’ என்று கட்டளையிட்டார்.

ஆனால் ரஷியா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் செய்தது. இதனால் சினம் கொண்டெழுந்த நெப்போலியன், 6 லட்சம் வீரர்களுடன் ரஷியா மீது படையெடுத்தார்.

நெப்போலியனின் படையெடுப்பை, ரஷியா முன்கூட்டியே அறிந்திருந்ததால், அவரது படை மாஸ்கோவை அடைந்தபோது வெறிச்சோடிய நகரமே அவர்களை வரவேற்றது. சுமார் இரண்டரை லட்சம் ரஷியர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷியாவின் ஷா மன்னன், தன்னிடம் வந்து சரனடைவான் என்று, சுமார் ஒரு மாதம் அங்கேயே முகாமிட்டிருந்தார் நெப்போலியன்.

ஆனால் மன்னனுக்குப் பதிலாக பனிக்காலமும், கடுங்குளிரும்தான் வந்து சேர்ந்தது. நெப்போலியன் சுதாரித்துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கும் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியாகிப்போயிருந்தனர். வேறு வழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரீஸ் திரும்ப கட்டளையிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீரர்களுடன் சென்ற நெப்போலியன், வெறும் இருபதாயிரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

பிரெஞ்சு ராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி, பிரிட்டன், ரஷியா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன். வெற்றி கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த நெப்போலியன், சறுக்கி விழுந்தான். தோல்விக்கு பரிசாக, எல்பா என்ற தீவில் சிறைவாசம் கிடைத்தது. ஆனால் அந்த மாவீரனை ஓராண்டுக்கு மேல் அடைத்து வைத்திருக்க முடியவில்லை.

சிறையில் இருந்து தப்பி சென்ற நெப்போலியன் ஓடி ஒளியவில்லை. அவர் சென்றது தன்னுடைய காதல் மனைவி ஜோஸ்பீனைத் தேடி. சில மாதங்கள் ஜோஸ்பீனுடன் தனிமையில் வாழ்ந்தவர், பிரான்ஸ் மக்களின் ஆதரவோடு மீண்டும் மன்னனாக முடி சூட்டப்பட்டார். மக்களின் ஆதரவும், மனைவிகளின் ஆதரவும் நெப்போலியனுக்கு இருந்தது. அதனால் உற்சாகத்துடன் புதிய படையை உருவாக்கினார்.

இரண்டே ஆண்டுகளில் இங்கிலாந்தும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. இப்போது நெப்போலியனை விட அவரது எதிரணியின் படை பலம் அதிகம்.

இருப்பினும் துன்பத்தை தன்னுடைய நண்பனாக கருதிய நெப்போலியன், எதிரணியினரின் பெரும் பலத்தை அறிந்திருந்தும் தைரியமாக போருக்குக் கிளம்பினார். ‘கோழையாக வாழ்வதை விட, வீரனாக மடிவதே மேல்’ என்ற கொள்கையின் தலைவனாயிற்றே!

போருக்குச் செல்லும் முன் ஜோஸ்பீனை சந்தித்து பேசினார்.

‘என்றும் என் அன்பிற்குரியவளே! இதுவரை நல்வாய்ப்பு என்னும் தேவதையால் இதுவரை ஆசீர்வதிக்கப்பட்டு வந்த நான், முதன்முதலாய் ஆபத்து வளையத்துக்குள் சிக்கிக் கொண்டேன். இந்த நேரத்தில் உன்னைத்தவிர உலகில் என் நம்பிக்கைக்குரியவர்கள் வேறு எவரும் இல்லை’ என்று கட்டித் தழுவி கண்ணீர் விட்டார்.

நெப்போலியனின் கனிப்பு சரியாகவே இருந்தது. பெல்ஜியத்தின் ‘வார்ட்டலு’ என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலியன். அவரை சிறைபிடித்த இங்கிலாந்து ராணுவம், இம்முறை ஆப்பிரிக்காவுக்கு பக்கத்திலுள்ள ‘செயின்ட் ஹெல்லனா’ என்ற தீவில் சிறை வைத்தது.

அங்கிருந்தபடி தன் இதயம் கவர்ந்த காதலிக்கு நெப்போலியன் கடிதம் எழுதினார். ‘ஜோஸ்பீன்... இனி வாளுக்கு விடை கொடுத்து விட்டு, பேனா பிடித்து என் வரலாற்றை வரையப்போகிறேன். என் நெஞ்சில் என்றும் நீங்காமல் நின்று ஒளிவிடும் எழில் அரசியே! உன்னை எப்போதும் மறவாத என்னை, நீயும் மறக்காமல் இருக்க வேண்டும்’ என்று உருகியிருந்தார்.

தீவில் தனிமையில் வாடிய நெப்போலியனுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளில், அதாவது 1821-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி அந்த மாவீரனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

சாவின் மடியில் கிடந்தபோது அவரது வாயில் இருந்து கடைசியாக வெளிவந்த வார்த்தை ‘ஜோஸ்பீன்...’

தன்னுடைய மாவீரத்தால் உலகத்தையே ஆதிக்கம் செலுத்திய ஒருவனின் உள்ளத்தை, காலம் முழுவதும் ஒரு தேவதை ஆதிக்கம் செலுத்தியிருக்கிறாள். அதுதான் காதலின் அதிசயமும், வீரியமும். 

Next Story