தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க 23–ந் தேதி சிறப்பு முகாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க 23–ந் தேதி சிறப்பு முகாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
x
தினத்தந்தி 15 July 2017 3:00 AM IST (Updated: 14 July 2017 6:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, 23–ந் தேதி சிறப்பு முகாம்

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, 23–ந் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக, கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக சங்கு கூடத்தில், 18 முதல் 19 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்குதல், புகைப்படம் மாற்றுதல், வண்ண வாக்காளர் அட்டை வழங்குவது, புதிய வாக்காளர்களை சேர்த்தல் குறித்து மாநகராட்சி ஆணையர், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், நகரசபை ஆணையர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது:– மாவட்டத்தில் 18 முதல் 19 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வாக்குச்சாவடி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு, இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

விழிப்புணர்வு

மேலும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு ஊர்வலங்கள், மனித சங்கிலிகளை தாசில்தார்கள் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். ஓட்டு வில்லைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். கல்லூரி முதல்வர்கள் மாணவ– மாணவிகளிடையே வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்யவேண்டும். வாக்களிப்பது ஜனநாயக உரிமை என்பதை எடுத்துரைத்து தகுதியான அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட புதிய வாக்காளர்களை (சேர்ப்பது தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 23–ந்தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவ– மாணவிகள் 18 முதல் 19 வயதுடைய இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு படிவம்–6, பெயர் நீக்கத்துக்கு படிவம்–7, வாக்காளர் விவரங்களில் உள்ள தவறுகளை திருத்தம் செய்திட படிவம்–8, தொகுதிகள் முகவரி, பெயர் மாற்றம் செய்ய படிவம்–8 ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இணையதளத்திலும்...

மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி செல்போன்களில் T.N. election என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் புதிய வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் சேர்ப்பது தொடர்பான சந்தேகங்களை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் வாக்காளர் சேவை மையத்தின் தொலைபேசி எண் 0461– 2340099–ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்று கூறினார்.

யார்–யார்?

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர்கள் தீபக் ஜேக்கப், அனிதா, தேர்தல் பிரிவு தாசில்தார் ராமகிருஷ்ணன், தாசில்தார்கள் தாமஸ் பயாஸ்அருள், செல்வகுமார், நம்பிராஜன், ராமசந்திரன், அழகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story