அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3–ம் வகுப்பு மாணவி பலி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை


அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3–ம் வகுப்பு மாணவி பலி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 July 2017 3:45 AM IST (Updated: 15 July 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலுக்கு 3–ம் வகுப்பு மாணவி பலி

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த விஜயன் (வயது 45) என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (வயது 8). 3–ம் வகுப்பு படித்து வந்த அவளுக்கு சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து திரும்பியபோது தலைவலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. அந்தியூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து 2 நாட்கள் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனால் திவ்யதர்ஷினியை அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமடையாததால் இரவு 8 மணி அளவில் திவ்யதர்ஷினியை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கும் அவளுக்கு உடல்நிலை சரியாகாததால் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 2 மணி அளவில் திவ்யதர்ஷினி பரிதாபமாக இறந்தாள்.

அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் கேட்டு 2 மணி நேரம் தேவையின்றி தாமதப்படுத்தியதால் தான் இந்த சோகம் நேர்ந்துள்ளது எனக்கூறி உறவினர்கள் நேற்று காலை மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 4 மணி நேரம் நடந்த இந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது.


Next Story