மாணவர்களை ஏமாற்றும் போலியான தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை


மாணவர்களை ஏமாற்றும் போலியான தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 July 2017 4:00 AM IST (Updated: 15 July 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மாணவர்களை ஏமாற்றும் போலியான தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் படி கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி கவர்னர் மாளிகையில் நாள் தோறும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலர் தாங்கள் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஓட்டல் மேலாண்மை படித்து வருவதாகவும், தங்களுக்கு அங்கீகரிக்கப்படாத சான்றிதழை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது என கவர்னர் கிரண்பெடியிடம் புகார் கூறியிருந்தனர்.

இந்த புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக விசாரணை நடத்தும் படி கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

விசாரணையில், அந்த தொழில்நுட்ப நிறுவனம் கல்வி மையமாக பதிவு செய்யப்படாமல், கடையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் அல்லது மாநில தொழிற்பயிற்சி நிறுவனம், ஏ.ஐ.சி.டி.இ., தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திலும் அங்கீகாரம் பெறாததும், வேறு சில நிறுவனத்தின் பெயரில் சான்றிதழ்களை அந்த நிறுவனம் மாணவர்களுக்கு வழங்கி வருவதும் தெரியவந்தது. புதுவையில் இதேபோல் வேறு சில நிறுவனங்களும் செயல்பட்டு வருவது விசாரணையில் தெரிந்தது.

இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளை ஏமாற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தொழில்நுட்ப நிறுவனம் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார்.

மேலும், இது போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்குவதற்கு முறையான வழிகாட்டு நெறிகளை உருவாக்க வேண்டும். தொழிலாளர் துறை, கல்வித்துறை இணைந்து ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு இந்த வழிகாட்டி நெறிகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வப்போது இதுபோன்ற நிறுவனங்களில் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். போலியான நிறுவனங்கள் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.


Next Story