நடிகையை காப்பாற்ற 1½ கோடி வாக்குகள் எனக்கு ஓட்டு போட்டிருந்தால் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றியிருப்பேன்


நடிகையை காப்பாற்ற 1½ கோடி வாக்குகள் எனக்கு ஓட்டு போட்டிருந்தால் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றியிருப்பேன்
x
தினத்தந்தி 15 July 2017 5:00 AM IST (Updated: 15 July 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. நிகழ்ச்சியில் நடிகையை காப்பாற்ற 1½ கோடி மக்கள் வாக்கு அளித்துள்ளனர். எனக்கு ஓட்டு போட்டிருந்தால் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றியிருப்பேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

அரியலூர்,

மதுக்கடைகளை ஒழிக்க பாடுபட்டு வரும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக வர வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கான முன்னேற்ற திட்டங்களை கொண்டு வருவோம். அரியலூர் மாவட்டத்தில் சிமெண்டு ஆலைகளால் காற்று மாசுபடுகிறது.

மேலும் சிமெண்டு ஆலைகளுக்கான அதிகபட்ச லாரி போக்குவரத்தினால் விபத்துகளும் அதிகம் நடக்கின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னேரிக்கு கொள்ளிடம் நீரை கொண்டு வர வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அரசு கட்ட தவறினால் ஆகஸ்டு 5-ந்தேதி பா.ம.க. சார்பில் அணை கட்ட வேண்டி போராட்டம் நடத்தப்படும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. கிணறுகளை மூடி காவிரி பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு 1½ கோடி மக்கள் ஓட்டு போட்டு அவரை காப்பாற்றியதாக கூறுகின்றனர். அந்த ஓட்டை எனக்கு போட்டிருந்தால் நான் தமிழகத்தையும், மக்களின் தலை எழுத்தையும் மாற்றியிருப்பேன். தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என கூறும் ரஜினிகாந்த், தி.மு.க. தலைவர் கருணாநிதியை பாராட்டியபோது சொல்லியிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது சொல்லியிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலாவுடன் ஊழல் வழக்கில் சிறை சென்று இருப்பார்.

தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி நடந்து சென்றால் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. எதற்காக இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. சின்னத்தை பார்த்து ஓட்டுபோட்ட மக்கள் இனி திட்டத்தை பார்த்து ஓட்டுபோட வேண்டும். ரூ.200, 300-க்கு ஓட்டை விற்றுவிட்டீர்கள். ஆனால் இனிமேல் அதுபோல் நிலைஏற்படாது என நினைக்கிறேன். தமிழ்நாட்டை நாசப்படுத்தியவர் களை தூக்கி எறியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story