வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 15 July 2017 4:15 AM IST (Updated: 15 July 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்தல் செய்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான தகுதிகளானது, விண்ணப்பதாரர் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.06.2012–க்கு முன் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். 30.6.2017 அன்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதேபோன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ–மாணவியாக இருத்தல் கூடாது. எனினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். விண்ணப்பதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.

இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.9.2017–ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கொடுக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்வதற்கு அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை உள்ளிட்டவைகளின் அசல் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும். ஏற்கனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பம் பெற தேவையில்லை.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story