முதல் – மந்திரிக்கு புதிய ஹெலிகாப்டர் மாநில அரசு திட்டம்


முதல் – மந்திரிக்கு புதிய ஹெலிகாப்டர்  மாநில அரசு திட்டம்
x
தினத்தந்தி 15 July 2017 3:35 AM IST (Updated: 15 July 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

முதல் – மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு புதிய ஹெலிகாப்டர் வாங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய முதல் – மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மே மாதம் வறட்சி பாதித்த இடங்களை பார்வையிட லாத்தூர் மாவட்டத்தில் உள்ள நிலங்கா பகுதிக்கு சென்றார். அப்போது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மயிரிழையில் முதல் – மந்திரி உயிர் தப்பினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் முதல் – மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ராய்காட் மாவட்டம் சென்றார். அவர் அங்கு இருந்து மும்பை புறப்பட்ட போது அவரை அழைத்து வர நின்ற ஹெலிகாப்டர் முதல் – மந்திரி ஏறுவதற்கு முன்பாகவே பறக்க தொடங்கியது. இந்தநிலையில் முதல் – மந்திரி ஹெலிகாப்டரில் ஏறாததை உணர்ந்த விமானி மீண்டும் அதை தரையிறக்கினார். இந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து முதல் – மந்திரி செல்லும் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் முதல் – மந்திரி மற்றும் கவர்னர் பயணத்திற்கு புதிய ஹெலிகாப்டர் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மந்திராலயா அதிகாரி ஒருவர் கூறும்போது:–

முதல் – மந்திரி பயன்படுத்தி வந்த கிகோர்ஸ்கை ஹெலிகாப்டர் கடந்த 2011–ம் ஆண்டு வாங்கப்பட்டது. லாத்தூரில் விபத்தில் சிக்கிய போது அந்த ஹெலிகாப்டர் நொறுங்கியது. மாநில அரசுக்கு சொந்தமான மற்றொரு யூரோகாப்டர் ரக ஹெலிகாப்டரை எல்லா வானிலையிலும் பயன்படுத்த முடியாது. எனவே புதிய ஹெலிகாப்டர் வாங்குவதை தவிர தற்போது வேறு வழியில்லை. அரசு அதிநவீன ஹெலிகாப்டரை மத்திய விமான போக்குவரத்து இயக்குனரக பரிந்துரையுடன் வாங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முதல் – மந்திரியின் ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் ஒரு வாரத்திற்கு முதல் – மந்திரியின் ஹெலிகாப்டர் பயணங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இந்தநிலையில் தற்போது மழை காலம் முழுவதும் முதல் – மந்திரியின் ஹெலிகாப்டர் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Next Story