வீடு, வீடாக சென்று காசநோய் கண்டறிதல் முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று காசநோய் கண்டறிதல் முகாம் வருகிற 4–ந் தேதி வரை நடக்கிறது. அதை நாமக்கல்லில் கலெக்டர் ஆசியா மரியம் நேற்று தொடங்கி வைத்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாடு திட்டத்தின் சார்பில் துரித காசநோய் கண்டறிதல் குறித்த சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. அந்த முகாம் நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 4–ந் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக நாமக்கல்–பரமத்தி சாலை, போதுப்பட்டி, அண்ணாநகர் காலனியில் துரித காசநோய் கண்டறிதல் குறித்த சிறப்பு முகாமை நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
நீண்ட நாள் சளி, இருமல் தொடர்ந்து இருக்குமானால் அவர்களுக்கு காசநோய் தொற்று இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த காசநோயானது இருமல் ஏற்படும்பொழுது மற்றவர்களுக்கும் பரவக்கூடிய நோயாக இருக்கின்றது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் அதனை கட்டுப்படுத்துவது, அந்நோய் இல்லாமல் சரி செய்வதும் மிக மிக எளிது. காசநோய் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அரசு இலவசமாக மருந்துகளை வழங்கி வருகின்றது.
மக்களிடம் காசநோய் தாக்கம் இருக்கின்றதா என்பதை கண்டறியவதற்காக தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையின் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சார்பில் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு இன்று முதல் காசநோய் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் இதர பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் நேரில் சென்று ஆரம்ப பரிசோதனைகளை செய்து அதில் எவருக்கேனும் காசநோய் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படும். அப்பரிசோதனைகளில் காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு அரசு இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கி அவரின் நோயை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வீடு, வீடாககாசநோய் தொற்று இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பில் மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் நாடு முழுவதும் துரித காசநோய் கண்டறிதல் இயக்கத்தை தொடங்கி உள்ளது. அதையொட்டி நமது நாமக்கல் மாவட்டத்திலும் தேசிய நல குழுமத்தின் வழி காட்டுதலின் படி மாவட்ட காசநோய் மையம் சார்பாக துரித காசநோய் கண்டறிதல் திட்ட செயல்பாடுகள் அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் முழுவதும் காசநோய் அறிகுறி உள்ள இடங்களில் வீடு வீடாக சென்று துரித காசநோய் கண்டறிதல் முகாம் மூலமாக நோயாளிகளை கண்டறியும் பணி வருகிற ஆகஸ்டு 4–ந் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், பழங்குடியினர், சிறைசாலை கைதிகள், நெசவாளர்கள், மலைவாழ் இன மக்கள், மக்கள் நெருக்கம் அதிகம் மிகுந்த பகுதிகள் மற்றும் மருத்துவமனையை தொடர்பு கொள்ள முடியாத மக்கள் ஆகியோரை தேடி சென்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.
முன்னதாக காசநோய் கண்டறியும் பணியாளர்களுக்கு காசநோய் பரிசோதனைக்கருவிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
முகாமில் காசநோய் துணை இயக்குனர் (பொ) கணபதி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) சரஸ்வதி, துணை இயக்குனர் (தொழுநோய்) ஜெயந்தினி, எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர், ராஜேந்திரன் உள்பட சுகாதாரத்துறை பணியாளர்கள், காசநோய் துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கபில் நன்றி கூறினார்.