டி.ஐ.ஜி. ரூபா கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரி
பெங்களூருசிறையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்த டி.ஜ.ஜி. ரூபா, கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாவார்.
பெங்களூரு,
சிறையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், புதுச்சேரி கவர்னருமான கிரண்பெடி, டி.ஐ.ஜி. ரூபாவை பாராட்டி உள்ளார். இதனால் டி.ஐ.ஜி. ரூபா யார்? என்று பலரும் கேட்க தொடங்கியுள்ளனர். அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக பற்றிய சில விபரங்கள் வருமாறு:–
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் பிறந்தவர் தான் ரூபா. இவர், 2000–ம் ஆண்டு கர்நாடகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை(பேட்ஜ்) சேர்ந்தவர் ஆவார். யூ.பி.எஸ்.சி. தேர்வில் 43–வது இடத்தை பிடித்து ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்றார். மத்திய பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக ஐ.பி.எஸ். அதிகாரியாக ரூபா நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டார். இதனால் கர்நாடகத்தில் பிறந்து, கர்நாடகத்திலேயே பணியாற்றும் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்ற பெருமையை ரூபா பெற்றார்.கர்நாடகத்தில் யாதகிரியை 30–வது மாவட்டமாக அரசு அறிவித்தது. அப்போது யாதகிரி மாவட்டத்தின் முதல் போலீஸ் சூப்பிரண்டாக ரூபா நியமிக்கப்பட்டார். மேலும் பெங்களூரு நகர ஆயுதப்படை துணை போலீஸ் கமிஷனராகவும் ரூபா பணியாற்றியுள்ளார். அப்போது முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்று பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் ரூபா.
சமீபத்தில் மைசூரு–குடகு தொகுதியின் பா.ஜனதாவை சேர்ந்த பிரதாப் சிம்ஹா எம்.பி. கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை பரிமாறி இருந்தார். இதற்கு பிரதாப் சிம்ஹா எம்.பி.க்கு சமூக வலைதளம் மூலமாகவே ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தக்க பதிலடி கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். தற்போது கர்நாடகத்தின் முதல் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்று, சிறையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தி கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளார்.சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் ரூபா அம்பலப்படுத்தியதன் மூலம், அனைவரின் கவனத்தையும் கவர்ந்து உள்ளார். கடந்த ஆண்டு (2016) போலீஸ்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு வழங்கப்படும் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் கணவர் பெயர் முனிஷ் மவுட்ஜில் ஆகும். அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.