வீடுவீடாக சென்று காசநோய் கண்டறியும் முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


வீடுவீடாக சென்று காசநோய் கண்டறியும் முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 July 2017 5:30 AM IST (Updated: 15 July 2017 5:30 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் வீடுவீடாக சென்று காசநோய் கண்டறியும் முகாமினை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

வேலூர்,

வேலூர் மக்கானில் உள்ள அம்பேத்கர் நகரில் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று காசநோய் கண்டறியும் முகாம் தொடக்க விழா நடந்தது. இதனை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து, காசநோய் கண்டறிவதற்கான உபகரணங்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

வேலூர் மாவட்டத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்கள், தோல் மற்றும் காலணி உற்பத்தி தொழிற்சாலை பணியாளர்கள், கல்லுடைக்கும் தொழிலாளர்கள், முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்கள், செங்கல்சூளையில் வேலைபார்ப்பவர்கள் மற்றும் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் 1 லட்சத்து 30 ஆயிரம்பேர் உள்ளனர்.

இவர்களுக்கு காசநோய் இல்லா இயக்கத்தின் சார்பில் வீடுவீடாக சென்று காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது. இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் 3–ந் தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. இதற்காக வேலூர் மாநகராட்சியில் ஒரு குழுவும், 20 வட்டாரங்களில் தலா ஒரு குழுவும் என மொத்தம் 21 குழுக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு –முதுநிலை சிகிச்சை ஆய்வாளர், ஒரு கிராம சுகாதார செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் என 3 நபர்கள் பரிசோதனைசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு குழுவும் தினமும் தலா 50 குடும்பங்களை சந்தித்து பரிசோதனைசெய்வார்கள். அப்போது காசநோய் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் கூட்டு மருந்து நேரடி சிகிச்சை முறையில் மருந்துகள் வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.



Next Story