மூலைக்கரைப்பட்டி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் ராமானூஜம்புதூர் அருகே உள்ள சின்னார்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கன்னிமுத்து (வயது 75). கோவில் தர்மகர்த்தா.
இட்டமொழி,
தூத்துக்குடி மாவட்டம் ராமானூஜம்புதூர் அருகே உள்ள சின்னார்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கன்னிமுத்து (வயது 75). கோவில் தர்மகர்த்தா. இவருடைய மனைவி முருகம்மாள்(68). கன்னிமுத்து உடல் நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். அதன் பின்னர் அவரை காணவில்லை. முருகம்மாள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் முனைஞ்சிப்பட்டியில் இருந்து சிந்தாமணி செல்லும் வழியில் தனியார் கோழிப்பண்ணை அருகே சாலையோரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக, மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்–இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து வந்த முருகம்மாள், இறந்து கிடப்பது தனது கணவர் கன்னிமுத்துதான் என்று அடையாளம் காட்டினார். இதுதொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னிமுத்துவுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.