பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது


பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 16 July 2017 4:15 AM IST (Updated: 16 July 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டார்.

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பெத்தான்கோட்டையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 31 வயது மதிக்கத்தக்க பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் தற்காலிகமாக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியை சேர்ந்த சங்கர்(வயது 53) உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி ஆசிரியர் சங்கர் பள்ளியில் பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் துப்புரவு பணியாளர் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அப்துல்லா, ஆசிரியர் சங்கர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் ஆசிரியர் சங்கர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சாமிநாதன் உத்தரவின்பேரில் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தினர். அதன் விவரத்தை அறிக்கையாக மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஆசிரியர் சங்கரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சாமிநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான ஆணை நகல் திருச்சி மத்திய சிறையில் அவரிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story