மத்திய அரசின் முடிவு மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் தொல்.திருமாவளவன் பேட்டி


மத்திய அரசின் முடிவு மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 16 July 2017 4:00 AM IST (Updated: 16 July 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைமுறையில் மத்திய அரசின் முடிவு மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

பெரம்பலூர்,

தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையில்லாமல்...
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளிலும் பள்ளிகளை உருவாக்கிய பெருமை பெருந் தலைவர் காமராஜரையே சேரும். ஆனால் தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசுப்பள்ளிகளை அரசே மூடும் நிலை ஏற்பட் டிருக்கிறது. இது காமராஜருக்கு நாம் இழைக்கும் துரோகம் ஆகும். எனவே அரசுப்பள்ளிகளை மூடும் செயலை அரசு கைவிட வேண்டும். மாறாக அரசுப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேர் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கில வழியில் கல்வி கற்பது பெருமைக்குரியது என்கிற தோற்றத்தை உருவாக்கி தனியார் கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு செயல்படுகின்றன. இந்த நேரத்தில் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி சிறந்த மாணவர்களை உருவாக்குவது அரசின் கடமையாகும்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வினால் தமிழக கிராமப்புற மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நீட் தேர்வு குறித்த மத்திய அரசின் தன்னிச்சையான முடிவானது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் இருக்கிறது. எனவே நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் அல்லது நீட் தேர்வை முற்றிலும் கைவிட வேண்டும். இதனை கடிதம் மூலமாகவோ, அமைச்சரை சந்தித்தோ வலியுறுத்துவதை விட தமிழக முதல்-அமைச்சரே நேரடியாக பிரதமரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் விவசாயம் பாதிக்கப்படும் வகையில் மீத்தேன், ஷேல் எரிவாயு உள்ளிட்டவற்றை எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். எரிவாயு தேவைதான், எனினும் விவசாய நிலங்களை அழித்து அதனை பெறுவதை ஏற்க முடியாது. கதிராமங்கலம் போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும்.

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்து வரும் சாதி வன்கொடுமை படுகொலை சம்பவங்களை கண்டித்து விரைவில் திருச்சியில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து பெரம்பலூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Next Story