கன்னியாகுமரி அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை, பணம் பறிப்பு


கன்னியாகுமரி அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை, பணம் பறிப்பு
x
தினத்தந்தி 16 July 2017 3:45 AM IST (Updated: 16 July 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை, பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மேற்கூரையை பிரித்து...

கன்னியாகுமரி அருகே தெற்குகுண்டலைச் சேர்ந்தவர் சின்னத்தங்கம் (வயது 80). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால், சின்னத்தங்கம் ஒரு ஓட்டு வீட்டில் தனியாக வசித்தார்.

நேற்று முன்தினம் இரவு சின்னத்தங்கம் வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, யாரோ மர்ம நபர்கள் வீட்டின் மின்இணைப்பை துண்டித்து விட்டு, மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கினர். சத்தம் கேட்டு சின்னத்தங்கம் கண்விழித்தார். வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் புகுந்திருப்பதை உணர்ந்ததும் கதவை திறந்து வெளியே செல்ல முயன்றார். ஆனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வீடு முழுவதும் இருளாக இருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

அப்போது, மர்ம நபர்கள் சின்னத்தங்கத்தை மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க சங்கிலி, கையில் அணிந்திருந்த 1½ பவுன் காப்பு, தலையணை அடியில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து நேற்று காலை சின்னத்தங்கம் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் சின்னத்தங்கம் வீட்டுக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

சின்னத்தங்கத்திடம் நகை இருப்பதை அறிந்த நபர்களே இந்த கொள்ளையை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story