எப்போதும் கூட்டணி கட்சியாகவே இருக்க முடியாது திருநாவுக்கரசர் பேச்சு


எப்போதும் கூட்டணி கட்சியாகவே இருக்க முடியாது திருநாவுக்கரசர் பேச்சு
x
தினத்தந்தி 16 July 2017 4:15 AM IST (Updated: 16 July 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 5 வருடங்களிலோ, 10 வருடங்களிலோ, அடுத்த தேர்தலிலோ காங்கிரஸ் அட்சி அமைக்க வேண்டும். எப்போதும் கூட்டணி கட்சியாகவே இருக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

விருதுநகர்,

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி விருதுநகர் தேசபந்துதிடலில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மாணிக்கம் தாகூர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் விவசாய புரட்சியையும், தொழில் புரட்சியையும் ஏற்படுத்தினார். 14 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். 2 பிரதமர்களை உருவாக்கியவர். அவர் பிறந்த இந்த மண்ணுக்கு மரியாதை செலுத்துவோம். ஆண்டு தோறும் விருதுநகரில் ஜூலை 15-ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட வேண்டும் என மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டார். அதுபற்றி பரிசீலிக்கப்படும்.

நான் பா.ஜ.க.வை விட்டு விலகியபோது மைத்ரேயன் எம்.பி., சசிகலா நடராஜன் தம்பி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் அ.தி.மு.க.வில் சேர ஜெயலலிதா அழைக்கிறார்கள் என்று அழைத்தார்கள். ஆனால் மறுத்து விட்டேன். நான் காங்கிரசில் சேருவதற்கு மாணிக்கம் தாகூர் தான் காரணம். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அ.தி.மு.க. மூன்றாக உடைந்து விட்டது. எம்.ஜி.ஆரை மறந்து விட்டார்கள். கட்சியும், ஆட்சியும் பலவீனப்பட்டு விட்டதால் பா.ஜ.க.விற்கு பயப்படுகிறார்கள். தமிழகத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 30 லட்சம் காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

நாளையோ, அடுத்த தேர்தலிலோ, 5 ஆண்டுகளிலோ, 10 ஆண்டுகளிலோ காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும். எப்போதும் கூட்டணி கட்சியாகவே இருக்க முடியாது. கூட்டணி ஆட்சியில் சில அமைச்சர்கள் பதவிகளையாவது பெற வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைக்க காமராஜர் பிறந்த நாளில் சபதமேற்போம். ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தினால் அ.தி.மு.க.வினருடன் பிரதமர் மோடியிடமும் விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா மருத்துவ சிகிச்சையில் இருந்த போது ராகுல் காந்தி வந்து பார்த்துச் சென்றார். பிரதமர் மோடி வரவில்லை. மோடி பயப்படுகின்ற ஒரே ஆள் ராகுல்காந்தி தான்.
இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-

காமராஜர் கருப்பு தான். நானும் கருப்பு தான். ஆனால் கருப்பாக இருப்பவர்கள் யாரும் காமராஜராக முடியாது. தமிழகம் கல்வி, தொழில், விவசாயத்தில் முன்னேறுவதற்கு வித்திட்டவர் காமராஜர் தான். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த திட்டங்களை வேறு பெயரில் நிறைவேற்றி வருகிறார்.

பா.ஜ.க. அரசு புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்கின்றது. கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வர முயல்கிறது. அந்த முயற்சி பலிக்காது. புதுச்சேரி மக்களுக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறுவதற்கு மத்திய காங்கிரஸ் ஆட்சி தான் காரணம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய நாம் ஒன்றுபட்டு உழைப்போம்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் நவீன், மாவட்ட தலைவர்கள் ராஜா சொக்கர், தளவாய் பாண்டியன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாநில மகளிரணி செயலாளர் ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி ஜெகதீஷ் சங்கர், விருதுநகர் சங்கரபாண்டியன் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான காமராஜர் விருது வழங்கப்பட்டது. முன்னதாக காமராஜர் நினைவு இல்லம் சென்ற திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அங்கு நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு வசதிகள் செய்து கொடுத்ததற்காக கர்நாடக அரசு உயர்மட்ட விசாரணை நடத்தி அந்த அறிக்கையின் அடிப்படையில் உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

Next Story