சரக்கு, சேவை வரியை திரும்பபெற வேண்டும் தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்


சரக்கு, சேவை வரியை திரும்பபெற வேண்டும் தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 July 2017 4:17 AM IST (Updated: 16 July 2017 4:17 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாமக்கல்லில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நகர, ஒன்றிய, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராணா ஆனந்த், கதிர்வேல், காந்தி என்கிற பெரியண்ணன், ஆனந்தகுமார், நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் அமைச்சரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான மு.பெ.சாமிநாதன், முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன், மாநில இளைஞர் அணி இணைசெயலாளர் சுபா.சந்திரசேகர், துணை செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., பைந்தமிழ் பாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், ‘நீட்’ தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி வருவதால், ‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கூட அனுப்பாத தமிழக அரசின் மெத்தன போக்கிற்கு கண்டனம் தெரிவிப்பது. மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரியால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன.

இதில் மாவட்ட அவைத் தலைவர் உடையவர், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசுவாமி துணை செயலாளர்கள் கே.பொன்னுசாமி, விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story