கவுண்டிபாளையத்தில் சாலை விரிவாக்க பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்


கவுண்டிபாளையத்தில் சாலை விரிவாக்க பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 July 2017 4:20 AM IST (Updated: 16 July 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

கவுண்டிபாளையத்தில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி சாலை விரிவாக்க பணியை நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தம்பாளையம்,

பரமத்தி முதல் திருச்செங்கோடு வரை சாலை மேம்பாட்டு பணிகள் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. கந்தம்பாளையம் அருகே உள்ள கவுண்டிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே இப்பணிகள் நடைபெற்றபோது, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் பைப்-லைன் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் சாலையோரமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் அமைத்து கொடுக்கப்பட்ட சிறிய குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறும் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கவுண்டிபாளையத்தை இணைக்கும் இணைப்பு சாலைகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் கவுண்டிபாளையத்தில் உள்ள இரு பிரதான வீதிகளும் புதிய தார்சாலையில் இருந்து சுமார் 6 அடி பள்ளத்தில் உள்ளது. எனவே அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் மற்றும் சாலைப்பணிகளை விரைந்து செய்து தர வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இருப்பினும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

எனவே அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார் பொதுமக்களிடமும், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கவுண்டிபாளையம் பொதுமக்களின் சார்பில் கொடுக்கப்பட்டு உள்ள மனுவில் உள்ள குறைகள் ஒருமாத காலத்தில் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 5 மணி நேரம் சாலை விரிவாக்க பணி நிறுத்தப்பட்டது.

Next Story