தாம்பரத்தில் நவீன தீயணைப்பு வாகனம் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டால் அவற்றை ‘ஸ்கை லிப்ட்’ எனப்படும் உயர் கோபுர தீயணைப்பு வாகனங்கள் மூலமே அணைக்க முடியும்.
தாம்பரம்,
இதற்காக தாம்பரத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாநில பயிற்சி நிலையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 2 ‘ஸ்கை லிப்ட்’ தீயணைப்பு வாகனங்கள் பின்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. இதை கையாளுவது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நவீன வாகனம் 104 மீட்டர் உயரத்துக்கு சென்று தீயை அணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தீயணைப்பு வீரர்கள் 320 அடி உயரம் வரை சென்று, 360 டிகிரி சுற்றளவில் எரியும் தீயை அணைக்க முடியும்.
ஹைட்ராலிக் மற்றும் சென்சார் மூலம் இந்த கருவி இயங்குகிறது. தற்போது தலா ரூ.20 கோடி மதிப்புள்ள 2 நவீன வாகனங்கள் தாம்பரத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் உள்ளது.
தாம்பரம் மற்றும் ராஜ்பவன் தீயணைப்பு நிலையங்களுக்கு இந்த நவீன வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரிய கட்டிடங்களில் ஏற்படும் தீயை அணைக்க இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.