கார் மீது வேன் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி


கார் மீது வேன் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
x
தினத்தந்தி 16 July 2017 5:28 AM IST (Updated: 16 July 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே கார் மீது வேன் மோதிய பயங்கர விபத்தில் தாய், மகன், மருமகன் ஆகிய 3 பேர் பலியானார்கள்.

பனப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் அருகே கார் மீது வேன் மோதிய பயங்கர விபத்தில் தாய், மகன், மருமகன் ஆகிய 3 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் விஸ்வேஸ்வரன் (வயது 58). இவரது மனைவி ஹேமரத்னா (51). இவர்களது மகன் கிரீஷ் (28), மகள் நசியா (30), அவரது கணவர் தியாகராஜன் (35), நசியாவின் மகள் ஷியா (5) ஆகியோர் காரில் நேற்று காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

காரை தியாகராஜன் ஓட்டி வந்தார். அவர்களது கார் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை கடந்து ஓச்சேரி அருகே பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் களத்தூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது களத்தூர் கிராமத்துக்குள்ளிருந்து மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடக்க முயன்றார். அவர் மீது கார் மோதாமல் இருப்பதற்காக தியாகராஜன் ‘திடீர்’ பிரேக் பிடித்து ஒதுக்க முயன்றார்.

இதில் நிலைதடுமாறிய கார் மற்றொரு பாதையான சென்னை–பெங்களூரு சாலைக்கு திரும்பியது. அப்போது சென்னையிலிருந்து டி.வி.மற்றும் பர்னிச்சர் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆற்காடு நோக்கி வந்த வேன் இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரிலிருந்த 6 பேரும், வேனை ஓட்டி வந்த சென்னை கொளத்தூர் கல்பாளையம் அண்ணா தெருவை சேர்ந்த டிரைவர் பாக்கியராஜ் (32), பெரம்பூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிளீனர் ரவி (50) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்களும் அவளூர் போலீசாரும் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயத்துடன் துடித்த காரை ஓட்டி வந்த தியாகராஜன் மற்றும் வேன் டிரைவர் பாக்கியராஜ், கிளீனர் ரவி ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விஸ்வேஸ்வரன், அவரது மனைவி ஹேமரத்னா, மகன் கிரீஷ், மகள் நசியா, பேத்தி ஷியா ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தியாகராஜன் மற்றும் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது மாமியார் ஹேமரத்னா, மைத்துனர் கிரீஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர்.

மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் இருமார்க்கத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன. போலீசாரின் மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.

விபத்து குறித்து அவளூர் போலீசார் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Next Story