குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்


குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 17 July 2017 3:30 AM IST (Updated: 16 July 2017 10:23 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடப்பதை கைவிடக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்படி ஆம்பூரில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர் திறக்கப்பட்ட ஒரு கடையும் பொதுமக்கள் போராட்டத்தால் அன்றே மூடப்பட்டது. இதனால் ஆம்பூரில் வேறு ஒரு இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் பாரதி நகர், கண்ணதாசன், காமன்தட்டு போன்ற பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு கானாற்றை ஒட்டியுள்ள பகுதியில் தனிநபர் ஒருவரின் இடத்தில் கடை கட்டப்பட்டு வருவதாகவும், அதில் 2 டாஸ்மாக் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் சான்றோர்குப்பம் பகுதியில் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை கைவிடக்கோரி திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய் துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்பு பகுதியில் ‘‘டாஸ்மாக் கடை வராது என்றும், இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாது’’ எனவும் உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story