கோவில்களில் தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மற்றும் போளூரில் இந்து முன்னணி சார்பில் கோவில்களில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை,
கோவில்களில் தரிசனத்துக்கு பல்வேறு வகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 16–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று திருவண்ணாமலையில் பஸ் நிறுத்தம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை நகரத் தலைவர் கணபதி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை நகர பொது செயலாளர்கள் வெங்கடேசன், கணபதி ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட தலைவர் சங்கர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோவில்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் போளூரில் காந்தி பூங்கா அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்பாட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.