கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2017 3:00 AM IST (Updated: 16 July 2017 10:40 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணியினர் ஊட்டி, கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டி,

தமிழகத்தில் உள்ள கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க வேண்டும். கோவில்களில் தரிசன கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்களை அரசு நிர்வகிப்பதை கைவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊட்டி நகர மற்றும் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் ஊட்டி ஏ.டி.சி திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து மாவட்ட தலைவர் மஞ்சுநாத் கூறும்போது, தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில் கிடைக்கும் வருமானம் கோவிலுக்கே சேர வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை. எனவே, ஐகோர்ட்டு உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும். மேலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதில் கோவை மாநகர் மாவட்ட பேச்சாளர் கிருஷ்ணன், ஊட்டி நகர தலைவர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். இந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த சீதா, மாலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜ.க. கொள்கை பரப்பு செயலாளர் பி.ஏ.சாமி, சோமு உள்பட பலர் பேசினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.


Next Story