தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் 3 இடங்களில் இந்து முன்னணியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மெயின் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராகவேந்திரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மண்டல தலைவர் முனியசாமி, நெல்லை மாவட்ட பொது செயலாளர் பிரம்மா, அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை வக்கீல் பிரிவு தலைவர் சாக்ரடீஸ் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முத்தையாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் பால்மாரியப்பன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.