சிங்கம்புணரியில் நடந்த மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
சிங்கம்புணரியில் உள்ள கூவானை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 350–க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி மேலத்தெரு கூவாவயல் ஆயக்கட்டுக்காரர்களுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற கூவானை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மழை வேண்டி புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த கிராமத்தார்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று சிங்கம்புணரியில் உள்ள கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
முன்னதாக மேலத்தெரு ஆயக்கட்டுகாரர்கள் கண்மாயில் மஞ்சுவிரட்டு களம் அமைத்து, போட்டிக்காக வாடிவாசல் அமைத்தனர். இதனையடுத்து சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் காளைகளுக்கு துண்டுகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மஞ்சுவிரட்டு களத்திற்கு வரவழைக்கப்பட்டன. அதன்பின்னர் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு மஞ்சுவிரட்டு தொடங்கியது. போட்டியில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 350–க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. மேலும் இதில் சிங்கம்புணரி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு, மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை ஆர்வத்துடன் அடக்க முயற்சித்தனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்பதால், போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். முடிவில் மஞ்சுவிரட்டில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியும், கீழே விழுந்தும் ஒருசிலருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.