குத்தாலம் அருகே பாப்பா குளம் தூர்வாரும் பணி கலெக்டர் ஆய்வு


குத்தாலம் அருகே பாப்பா குளம் தூர்வாரும் பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 July 2017 2:30 AM IST (Updated: 17 July 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே பாப்பா குளம் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

குத்தாலம்,

குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் ஊராட்சியில் பிரதமரின் நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் அரையபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஏரிக்கரை சாலை மேம்பாட்டு பணிகளையும், ரூ.32 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பாப்பா குளம் தூர்வாரும் பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டார். தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வானாதிராஜபுரம் கிராமத்தில் பெரிய வாய்க்கால் தூர்வாரும் பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழலகம் கட்டுமான பணியையும், வில்லியநல்லூர் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது, மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், ஜான்சன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர்கள் பலராமன், செங்குட்டுவன், உதவி பொறியாளர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story