நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நுழைவு பாலம் அமைக்க கோரி அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிணத்துக்கடவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நுழைவு பாலம் அமைக்க கோரி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவில் அனைத்து கட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நுழைவு பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்துக்கு குறிச்சி பகுதி கழக செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமை தாங்கினார். கிணத்துக்கடவு நகர தி.மு.க செயலாளர் மார்கெட் சின்னச்சாமி, கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின் தெற்க்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நெகமம் கே.வி.கே.சபரிகார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினர் கூறியதாவது:–
கோவை ஈச்சனாரி முதல் கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி ஆச்சிப்பட்டவரை 4–வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்றுவருகிறது. தற்போது இந்த ரோட்டில் கிணத்துக்கடவு பஸ்நிலையத்தில் இருந்து உயர்மட்டபாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதே போல் உயர்மட்ட பாலத்துடன் அனுகு பாலத்தை இணைப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இந்த அனுகுபாலம் அமையக்கூடிய இருபுறங்களிலும் அரசு அலுவலகங்கள் உள்ளன.
இதற்கிடையே உள்ள அண்ணாநகர், செம்மொழிக்கதிர்நகர், பகவதிபாளையம் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வீடுகளுக்கு செல்ல பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 750மீட்டர் தூரத்தில் உள்ள சிங்கராம்பாளையம்சென்று அங்கிருந்துதான் திரும்பி தங்களது வீட்டிற்கு சென்று வரமுடியும். இதனால் காலதாமதமாகும். விபத்துகளும் ஏற்படும். ஆகவே கிணத்துக்கடவு பஸ்நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நுழைவு பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், கம்யூனிஸ்ட்கட்சி நிர்வாகி மருதாசலம், கொங்குநாடுமக்கள் தேசியகட்சியின் மாவட்ட செயலாளர் நித்தியானந்தம், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாவட்டதுணை செயலாளர் சுப்பிரமணியம், மற்றும் தந்தை பெரியார்திராவிடர்கழகம், ஆதிதமிழர்பேரவை, பெருந்தலைவர்மக்கள்கட்சி நிர்வாகிகள்,அண்ணாநகர், பகவதிபாளையம், பெரியார்நகர் பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கிருஷ்ணன்நன்றி கூறினார்.