நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணி, கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
நெல்லை,
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும். மாசுபடுவதை தடுக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆற்றுப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து வலியுறுத்தினர்
இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் பகுதியை சுத்தப்படுத்துவது எனவும், அதற்கான திட்ட வரைவு படம் அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகத்தில் இருந்து பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திட்ட வரைவு அறிக்கை பெறப்பட்டு, நெல்லை மாநகராட்சி பகுதியில் ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. கருப்பந்துறை, பரணி நகர் ரெயில்வே பாலம், கணேசபுரம், கைலாசபுரம், அரவிந்த் கண் ஆஸ்பத்திரி பின்புறம், சிந்துப்பூந்துறை படித்துறை, வடக்கு புறவழிச்சாலை பகுதி, வண்ணார்பேட்டை, எட்டுத்தொகை நகர், கைலாஷ் நகர், கலெக்டர் அலுவலகம் எதிரே ஆகிய இடங்களில் சுத்தம் செய்யும் பணி நேற்று காலை 7.25 மணிக்கு தொடங்கியது. கலெக்டர் சந்தீப் நந்தூரி, சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும் போது, “தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக நெல்லையில் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆற்றங்கரையோர பகுதியை சுத்தம் செய்ய முடிவு செய்தோம். தூய்மை செய்யும் பணியில் 23 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1,500 மாணவ–மாணவிகள் ஈடுபடுகிறார்கள். முதற்கட்டமாக 5 கிலோ மீட்டர் தூரம் சுத்தம் செய்யப்படும்“ என்றார்.
அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் கூறும் போது, “இஸ்ரோ“ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் செயற்கோள் எடுத்த படத்தை வாங்கி இருந்தோம். தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் நெல்லை மாவட்ட பொதிகை மலையில் இருந்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை வரைபடத்தில் தெளிவாக இருக்கிறது. கலெக்டர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நெல்லை பகுதியை தனியாக எடுத்து வரைபடத்தை கொடுத்தோம். அதன்படி பணி நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு மண்டலமாக பிரித்து, அந்தந்த பகுதி மக்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்படும். தடுப்பு வேலிகள் அமைப்பது குறித்து கலெக்டரிடம் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்“ என்றார்.
தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. மாணவ–மாணவிகள் டி.சர்ட் அணிந்து மண்வெட்டியால் கரை பகுதியை சுத்தம் செய்தனர். 15 குழுக்களாக பிரிந்து பணிகள் நடந்தன. மொத்தம் 16 எந்திரங்கள் தூய்மை பணிக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த பணியில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தாமிரபரணி ஆற்று பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுத்தம் செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகம், பேட்டை ராணி அண்ணா கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி உள்ளிட்ட 23 கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் சுத்தம் செய்தனர். இந்த பணியை தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து மக்கள் வேடிக்கை பார்த்தனர். பணி காலை 11.30 மணிக்கு நிறைவடைந்தது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுத்தம் செய்யப்பட்டன.
தொடர்ந்து ஆற்றங்கரை பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லூரி மாணவ–மாணவிகள் தாமிரபரணி ஆற்றின் பாரம்பரியத்தையும், அதை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பற்றி கலை நிகழ்ச்சி நடத்தி காட்டினர். இந்த நிகழ்ச்சி அங்குள்ள மக்களை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து துப்புரவு பணியில் ஈடுபட்ட கல்லூரிகளுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி கேடயம் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, சக்திவேல் வராகி சித்தர், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த அந்தோணி குரூஸ், மோட்சராஜன், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுத்தம் செய்யும் பணி முடிந்தவுடன், கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, “சுத்தம் செய்த பகுதியை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இந்த பகுதியில் ஒவ்வொரு மாதமும் சுத்தம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடரும். ஆற்றை பற்றியும் பொதுமக்களுக்கு அக்கறை வேண்டும். அரசு நினைத்தால் மட்டும் முடியாது. பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் எந்த பணியையும் முழுமையாக செய்ய முடியும்“ என்றார்.