கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி சேலத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கோவில்களில் தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்யக்கோரி சேலத்தில் நேற்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்,
கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குறிஞ்சி சேகர் கலந்து கொண்டு பேசினார். மாநகர துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இந்து கோவில்களையும், கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களையும் பராமரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்து இயக்க பிரதிநிதிகள் கொண்ட தனி வாரியம் அமைத்து சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்துக்களின் கோவில் நிலங்கள் மற்றும் கடைகளை, மற்ற மதத்தினருக்கு வழங்கக்கூடாது. ஏற்கனவே கொடுக்கப்பட்டவைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை சம்பளம் கொடுப்பதற்கு மட்டும் பயன்படுத்தாமல் இந்துக்களின் கலாசாரம், பண்பாடு, ஆன்மிக வகுப்பு, கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
கோவில்களில் தரிசன கட்டணம் என்ற பெயரில் இந்து சமய அறநிலையத்துறையில் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது. கோவிலுக்கு சொந்தமான பல லட்சம் ஏக்கர் நஞ்சை, புன்செய், மானாவரி நிலங்களிலும் மற்றும் கடைகள், வீடுகளில் இருந்து பலகோடி ரூபாய் வருமானம் வருகிறது. எனவே, பக்தர்களிடம் இருந்து பெறும் தரிசன கட்டணத்தை உடனே தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடியவில்லை. அதற்கு என்ன காரணம்?. இந்தாண்டு ஆடி திருவிழா நடக்குமா? நடக்காதா? என்று பக்தர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதிகாரிகளின் அலட்சியபோக்கே காரணம். அதிகாரிகள் நினைத்திருந்தால் 3 மாதத்தில் பணிகளை முடித்திருக்க முடியும். ஆனால் அது நடைபெறவில்லை. கேரளாவில் இலவச தரிசனம் சாத்தியமாகும் போது, தமிழகத்தில் அது ஏன் சாத்தியம் ஆகாது? எனவே, தரிசன கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.