மாநில அரசுக்கு தான் அதிகாரம், நியமன உறுப்பினரை மத்திய அரசு நியமித்ததால் கருத்து வேறுபாடு நாராயணசாமி பேட்டி
நியமன உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உண்டு. ஆனால் மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்ததால்தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என நாராயணசாமி தெரிவித்தார்.
ஆலந்தூர்,
யார் மீதும் எனக்கு தனிப்பட்ட விரோதமோ, குரோதமோ கிடையாது. மாநில மக்களின் நலன் தான் முக்கியம். அதற்காக எதையும் செய்ய நான், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கிறோம்.
புதுச்சேரி மக்களுக்கு வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்து உள்ளோம். அதை நிறைவேற்ற வேண்டியது எங்கள் கடமை. அதை படிப்படியாக செய்து வருகிறோம். இதில் குறுக்கீடுகள் வந்ததால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒரு அதிகாரம் இருக்கிறது.
நிர்வாகி என்ற முறையில் கிரண்பெடிக்கு ஒரு அதிகாரம் இருக்கிறது. அதேபோல குடியரசு தலைவருக்கு ஒரு அதிகாரம் உண்டு. அந்தந்த எல்லைக்குள் அவர்கள் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் எந்தவித பிரச்சினையும் கிடையாது. நாங்கள் விதிமுறைக்கு உட்பட்டு செயல்படுகிறோம்.
ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் நிதி செலவு விதிமுறைகளை மீறாமல் செயல்பட்டு வருகிறோம். கடந்த காலங்களில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் 65 சதவீதம் தான் செலவு செய்யப்பட்டது. நாங்கள் 95 சதவீதம் செலவு செய்து உள்ளோம். ஒரு வருடத்தில் மாநிலத்தின் வளர்ச்சி 11.4 சதவீதம் ஆகும்.
பிரதமர் மோடி அரசின் வளர்ச்சி 6.6 சதவீதம் தான். சுற்றுலா துறையில் வளர்ச்சி, தொழிற்சாலை தொடங்க நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்து இருக்கிறோம்.
இதற்கு மாநில நிர்வாகி என்பவர் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.
‘நீட்’ தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் எல்லா மாநிலங்களில் நடத்தப்பட்டது. ‘நீட்’ தேர்வை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழகம், புதுச்சேரி அரசுகள் அறிவித்தன. இதில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு கோரி மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அது கிடப்பில் உள்ளது.
மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ கட்டாயமாகிவிட்டது. மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழகம், புதுச்சேரியில் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் 5 ஆண்டுகளுக்கு விலக்கு கேட்டோம். கர்நாடகா, கேரளா மாநிலங்களில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் மாற்றி அமைத்துவிட்டனர். நாங்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு உள்ளோம். அதை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
நியமன உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது. மாநில அரசுதான் பரிந்துரை செய்ய வேண்டும். இது சட்டத்திலும் குறிப்பிட்டு உள்ளது. இதுவரை மாநில அரசு பரிந்துரை செய்தவர்களை தான் மத்திய அரசு நியமித்து உள்ளது.
ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்து உள்ளது. இதில்தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடு. இதனால் நீதிமன்றம் சென்று இருக்கிறோம். கண்டிப்பாக நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.