3 மாதத்தில் சுத்தமான காரைக்காலை உருவாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்


3 மாதத்தில் சுத்தமான காரைக்காலை உருவாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 17 July 2017 3:30 AM IST (Updated: 17 July 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

சுத்தமான காரைக்காலை உருவாக்க அனைவரும் இணைந்து செயலாற்றவேண்டும் என்ற கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்கால்,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்று காலை 6.30 மணிக்கு காரைக்காலுக்கு வருகை தந்தார். புதுச்சேரியில் இருந்து கார் மூலம் வருகை தந்த அவரை மாவட்ட எல்லையான நண்டலாற்று பாலம் அருகே மாவட்ட கலெக்டர் கேசவன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் மற்றும் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதன் பின்னர் சுத்தமான காரைக்கால், பாதுகாப்பான காரைக்கால் என்பதை வலியுறுத்தி நடந்த சைக்கிள் பேரணியில் கலந்துகொண்ட கவர்னர் கிரண்பெடி, பூவம், ராயன்பாளையம், வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி, கீழகாசாக்குடி, தலத்தெரு வழியாக காரைக்கால் வந்தடைந்தார். தொடர்ந்து காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் இணைப்புச்சாலை வழியாக சென்று வாரச்சந்தை, தற்காலிக நேரு மார்க்கெட், பழைய நேரு மார்க்கெட் ஆகிய பகுதிகளை பார்வையிட்ட கவர்னர் கிரண்பெடி கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தார்.

இந்த பேரணியில் கலெக்டர் கேசவன், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், மண்டல போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி, நகராட்சி ஆணையர் சுதாகர், புதுச்சேரி அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன், காரைக்கால் வர்த்தகர் சங்கத் தலைவர் ஆனந்தன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாணவர் காவல் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ–மாணவிகளிடம் கவர்னர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:–

தூய்மையான காரைக்கால், பாதுகாப்பான காரைக்காலை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு உள்ளது. இனிமேல் இந்த இயக்கத்தை நீங்கள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தூய்மையும், பாதுகாப்பும் அனைவருக்கும் அவசியமாகும். எல்லோரும் இணைந்தால் இது நிச்சயம் சாத்தியமாகும். நம்மை சுற்றியுள்ள பகுதிகள் தூய்மையாக இருந்தால் நம்மிடையே நல்ல எண்ணங்கள் ஏற்படும்.

போலீஸ் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டால் பாதுகாப்பான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். இவை இரண்டும் நமக்கு முழுமையாக கிடைக்கும்போது நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

காரைக்காலை சுத்தமாக மாற்றினால் பிரதமர், பிரதமர் அலுவலகத்தில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்வார்கள். அதற்கு அனைவரும் காரைக்காலை சுத்தமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்ற வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சிரத்தை எடுத்துக்கொண்டால் மட்டுமே அது சாத்தியமாகும். சுத்தமான காரைக்கால் என்பதை முதலில் நமது வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். வணிகர்களும் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 3 மாதங்களில் சுத்தமான காரைக்காலை உருவாக்க அனைவரும் இணைந்து செயலாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காலை 8.30 மணிக்கு கவர்னர் கிரண்பெடி புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டுச்சென்றார்.

காரைக்காலில் சுமார் 10 கி.மீ. தூரம் அவர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டார். அப்போது வழியில் நின்றிருந்த பொதுமக்களை பார்த்து அவர் சிரித்த முகத்துடன் கையை அசைத்தபடி வந்தார். ஒரு கவர்னர் சைக்கிளில் சென்றதையும், தங்களைப் பார்த்து கையசைத்ததையும் கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.


Next Story