விவசாயிகள் போல் நடித்து கொள்முதல் மையங்களில் துவரம் பருப்பு விற்பனை
மராட்டியத்தில் இந்த ஆண்டு துவரம் பருப்பு உற்பத்தி அதிகமானதால், அதன் விலை வீழ்ச்சி அடைந்தது.
மும்பை,
மராட்டியத்தில் இந்த ஆண்டு துவரம் பருப்பு உற்பத்தி அதிகமானதால், அதன் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால், விவசாயிகள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளானார்கள். இந்த நிலையில், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படும் என்றும், இதையொட்டி விவசாயிகளுக்கு டோக்கன் வினியோகிக்கப்படும் என்றும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் தெரிவித்தார்.
அதன்படி, மாவட்டந்தோறும் கொள்முதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில், வியாபாரிகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர், விவசாயிகள் போல் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு கொள்முதல் மையங்களில் துவரம் பருப்பு விற்பனை செய்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வேளாண்துறை முதன்மை செயலாளர் பிஜய் குமார் உத்தரவிட்டிருக்கிறார்.