புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா


புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 17 July 2017 3:10 AM IST (Updated: 17 July 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

அம்மையாபட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மையாபட்டியில்
புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 156 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளின் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இதைத்தொடர்ந்து அந்த கடைகளை வேறு இடத்தில் திறப்பதற்கான முயற்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் சாலையில் புதுக்கோட்டையை அடுத்துள்ள அம்மையாபட்டி அய்யனார்கோவில் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அம்மையாபட்டி, உப்புபட்டி, கெட்டிகாரன்பட்டி, குளத்துப்பட்டி, தச்சவயல், சூழாப்பட்டி, கடையக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும், டாஸ்மாக் கடைக்காக கட்டப்படும் கட்டிடத்திற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுக்கோட்டை தாசில்தார் செந்தமிழ்குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், ஊர் பிரமுகர் வெற்றிசெல்வம் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்வோம், என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story