கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வந்து கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதில் வடமதுரை ஒன்றியம் மோர்பட்டி ஊராட்சி கோப்பம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோப்பம்பட்டியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வறட்சி காரணமாக எங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காவிரி கூட்டு குடிநீர் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் 3 கி.மீ. தூரம் நடந்து தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். கால்நடைகளுக்கு சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து முருநெல்லிக்கோட்டை ஏ.டி.காலனி மக்கள் குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுத்தனர். அதுபற்றி அந்த மக்கள் கூறுகையில், ஏ.டி.காலனியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. எனவே, புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.
மேலும் வேடசந்தூர் தாலுகா டி.கூடலூர் ஊராட்சி குப்பமேட்டுபட்டியை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், கடந்த 5 மாதங்களாக எங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஒரே நேரத்தில் மேல்நிலை தொட்டி உள்பட 3 தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனால் ஒரு நபருக்கு 5 குடம் கூட குடிநீர் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரை மேல்நிலை தொட்டி மூலம் மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினர்.
அதேபோல் தோட்டனூத்து அருகேயுள்ள அழகம்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் கொடுத்த மனுவில், வறட்சியால் மாவட்டம் முழுவதும் ஆயிரம் அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்று விட்டது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வந்து மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும், என்று கூறியிருந்தார்.
அகரம் அருகேயுள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மனைவி லட்சுமி உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் வந்து கொடுத்த மனுவில், எனது மகன் முனியப்பன் மில்லில் வேலை செய்கிறான். இந்த நிலையில் ஒரு பெண் கொடுத்த பொய் புகாரில் எனது மகன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.