திருவொற்றியூரில் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை உள்ள பகுதியில் வசித்துவரும் 360 குடும்பங்களை காலி செய்யக்கூறி நோட்டீசு வழங்கபட்டு உள்ளது.
திருவொற்றியூர்,
சென்னை சென்டிரல் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான ரெயில் மார்க்கத்தில் 4-வது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி ரெயில் பாதை விரிவாக்க பணிக்காக திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை உள்ள பகுதியில் வசித்துவரும் 360 குடும்பங்களை காலி செய்யக்கூறி நோட்டீசு வழங்கபட்டு உள்ளது. அவர்கள் அனைவருக்கும் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் பகுதியில் வீடுகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் ஜெயராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் தாசில்தார் செந்தில்நாதனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் “நாங்கள் 40 வருடங்களாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பிள்ளைகள் இதே பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். நாங்கள் வேறு பகுதியில் குடியேறினால் எங்களது வாழ்வாதாரமும், பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப்படும். எனவே எண்ணூர் சுனாமி குடியிருப்பில் காலியாக உள்ள 500 குடியிருப்பில் எங்களுக்கு இடம் தர வேண்டும்” என தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story