சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக வறண்டது


சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக வறண்டது
x
தினத்தந்தி 18 July 2017 4:45 AM IST (Updated: 18 July 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நேற்று வறண்டது. பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

செங்குன்றம், 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமானது புழல் ஏரி ஆகும். இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. 2015-ம் ஆண்டு பெய்த மழையில் புழல் ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதையடுத்து ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் உபரி நீர் கால்வாய் வழியாக எண்ணூர் பகுதியில் கடலில் கலந்தது.

புழல் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தினந்தோறும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் கடந்த ஆண்டு ஏரியின் நீர் இருப்பு 1,124 மில்லியன் கன அடியாக குறைந்தது. பருவமழை பெய்ய தவறியதாலும், கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தாலும் மெல்ல மெல்ல ஏரியின் நீர் இருப்பு குறைந்து கொண்டே வந்தது.

முழுவதும் வறண்டது

ஏரியின் நீர் இருப்பு குறைந்ததால் நேரடியாக தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு ஏற்றப்பட முடியாத நிலை இருந்தது. இதையடுத்து கடந்த 2 மாதமாக சென்னை குடிநீர் வாரியம் மூலமாக ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வந்தனர்.

எஞ்சிய நீரும் மோட்டார் மூலம் எடுக்கப்பட்டதால் புழல் ஏரி நேற்று முழுவதுமாக வறண்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 13 ஆண்டுகளுக்கு பிறகு புழல் ஏரி முற்றிலும் வறண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரி ஒரு மாதத்துக்கு முன்பே வறண்டு விட்டது.

குடிநீருக்கு பிரதான பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இந்த ஏரியும் வேகமாக வறண்டு வருகிறது. இந்த ஏரியில் நேற்றைய நிலவரப்படி 21 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இந்த ஏரியில் 776 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.

வேகமாக குறைகிறது

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,641 மில்லியன் கன அடி ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் இந்த ஏரியின் 1,778 மில்லியன் கன அடி தண்ணீர் இருந் தது. ஆனால் தற்போது 87 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு மட்டுமே உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதால் இங்குள்ள தண்ணீரும் வேகமாக குறைந்து வருகிறது.

ஏரிகள் பெரும்பாலானவை வறண்டு விட்டதால் கல்குவாரிகளில் உள்ள நீரையும், போரூர் ஏரியில் உள்ள நீரையும் சுத்திகரித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். மேலும் தாமரைப்பாக்கம் மாகரல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் தண்ணீர் அனுப்பப்படுகிறது. 

Next Story