பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 65 பேர் இடைநீக்கம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை
ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 65 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
சென்னை,
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் சிலர் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு வராமல் இருப்பதை கல்லூரி நிர்வாகம் கவனித்து வந்தது. அதன்படி ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் 65 மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பச்சையப்பன் கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒழுங்கீனமாக செயல்பட்ட 65 மாணவர்களை இடைநீக்கம் செய்து இருக்கிறோம். கல்லூரி வளாகத்துக்குள் வரும் அந்த மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லாமலும், வகுப்புக்கு செல்லும் மாணவர்களையும் சீரழிக்கும் வகையிலும் நடந்து கொண்டு இருந்தனர்.
இடைநீக்க நடவடிக்கை
கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம் என கூறிய அவர்கள் அதுபோல் எந்த ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை. அதனையே ஒரு காரணமாக கொண்டு வகுப்புக்கு செல்லாமல் இருந்தனர். அந்த 65 மாணவர்களிடமும் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளோம். அன்றைய நாட்களில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களுடைய பெற்றோருடன் கல்லூரிக்கு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் 25-க்கும் மேற்பட்டவர்கள் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள். கல்லூரி தொடங்கிய சில நாட்களிலேயே அவர்களின் நடவடிக்கை மோசமாக செல்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக...
இந்த ஆண்டு கல்லூரி திறந்த முதல் நாளிலே பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்சினையில் ஈடுபட்ட மாணவர்கள் இதில் இருக்கிறார்களா? என்று முதல்வர் கலைராஜிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘இதில் அப்படி யாரும் இல்லை. அந்த பிரச்சினை தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டார்கள். அதில் 2 பேர் மட்டும் தான் தற்போது கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களும் துறை தலைவர் முன்னிலையில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர்’ என்றார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களில் சிலர் கூறும்போது, ‘கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் எங்களால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. ஆனால் எங்களை கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்தை கூறி இடைநீக்கம் செய்து இருக்கிறது’ என்றனர்.
Related Tags :
Next Story