டி.ஐ.ஜி. ரூபா மீது குற்றம்சாட்டி அரசுக்கு டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் அறிக்கை தாக்கல்
டி.ஐ.ஜி. ரூபா சிறை விதிகளை மீறி செயல்பட்டதோடு சிறைத்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டு கூறியதால், அவருக்கும், டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கும் இடையே மோதல் உருவானது. இந்த விவகாரத்தில் சிறைத்துறையில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளான சத்திய நாராயணராவ், ரூபா ஆகியோரை கர்நாடக அரசு நேற்று அதிரடியாக பணி இடமாற்றம் செய்துள்ளது.
இந்த நிலையில், பணி இடமாற்றத்திற்கு முன்பாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் கர்நாடக அரசுக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 16 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா பணிக்கு சேர்ந்ததில் இருந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டார் என்பது உள்பட ரூபாவுக்கு எதிராக பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு:-
கூடுதல் சிறைகளை கண்காணிக்க...
“கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா கடந்த மாதம்(ஜூன்) 23-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு, ரூபா சிறையில் முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக ரூபா பதவி ஏற்ற பின்பு, அவருக்கு பெங்களூரு சிறை, துமகூரு பெண்கள் சிறை மற்றும் திறந்தவெளி சிறைகளை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர், தனக்கு பல்லாரி, பெலகாவி இண்டல்கா, தார்வார் மற்றும் கலபுரகி ஆகிய சிறைகளை கண்காணிக்கும் பொறுப்புகளை கூடுதலாக வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்.
இதுபற்றி உள்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ரூபாவிடம் கூறினேன். அதன்படி, என் மூலமாக தனக்கு கூடுதல் சிறைகளை கண்காணிக்கும் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று உள்துறையிடம் அனுமதி கேட்டார். அதுபற்றி உள்துறை இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எனக்கும், ரூபாவுக்கும் இடையே ஆரம்பத்திலேயே மோதல் போக்கு உருவானது.
2 நோட்டீசுகள்
அதன்பிறகு, துமகூரு சிறையில் ‘நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூபா ஏற்பாடு செய்தார். இதுபற்றி அவர் என்னிடம் கூறியதும், உடனே நான் சில அறிவுரைகளை அவருக்கு கூறினேன். அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பத்திரிகையாளர்களை அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும்படி தெரிவித்தேன். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அதிகப்படியான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கைதிகள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்த கூடாது என்று சிறைத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதனை ரூபா மீறி இருந்தார். இதன் காரணமாக விதிமுறைகளை மீறியதாக கூறி, அவருக்கு முதல் நோட்டீசு அனுப்பினேன்.
அந்த நோட்டீசு அனுப்பியதால் என்னுடன் மீண்டும் அவர் மோதலில் ஈடுபட்டார். அதன்பிறகு, அவர் தொலைகாட்சி சேனல்கள் முன்பு அடிக்கடி தோன்றி பேசியதோடு தொலைகாட்சி சேனல்களில் குழு விவாதத்திலும் கலந்துகொண்டார். சிறையில் உள்ள கைதிகளின் புகைப்படத்தை தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வெளியிட்டார். இதுவும் சிறைத்துறையின் விதி மீறலாகும். அதுபற்றி உரிய விளக்கம் அளிக்கும்படி ரூபாவுக்கு மற்றொரு நோட்டீசு அனுப்பி வைத்தேன்.
சிறைத்துறைக்கு களங்கம்
அதே நேரத்தில் கடந்த 10-ந் தேதி மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் முதல்-மந்திரியின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்ததோடு, அதே நாளில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் ரூபா ஆய்வு மேற்கொண்டார். இதனால் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி ரூபாவிடம் விளக்கம் கேட்டேன்.
இந்த நிலையில் சிறையில் தான் நடத்திய ஆய்வு குறித்து ரூபா எனக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கை என் கையில் கிடைக்கும் முன்பு தொலைகாட்சி சேனல்களுக்கு சென்றுவிட்டது. சிறைத்துறையில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளும் தாக்கல் செய்யும் அறிக்கைகள் ரகசியமாக வைக்கப்படும். ஆனால் ரூபா தாக்கல் செய்த முதல் அறிக்கை தொலைகாட்சி சேனல்களுக்கு சென்றதுடன், அந்த அறிக்கையால் சிறைத்துறைக்கு களங்கத்தையும், கெட்ட பெயரையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
உண்மைக்கு புறம்பானது
சொத்து குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. முத்திரைதாள் மோசடி வழக்கில் சிறையில் உள்ள தெல்கிக்கு கோர்ட்டு உத்தரவுப்படியே, அவர் சிறையில் நடத்தப்பட்டு வருகிறார். அவருக்காக சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.”
இவ்வாறு அந்த அறிக்கையில் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story