ஜெயில் விதிமுறைகளின்படி தான் சஞ்சய் தத் விடுதலை ஐகோர்ட்டில் மராட்டிய அரசு பதில்
ஜெயில் விதிமுறைகளின்படி தான் நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என்று மும்பை ஐகோர்ட்டில் மாநில அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
மும்பை,
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இதைத்தொடர்ந்து, சஞ்சய் தத் சரண் அடைந்தார். புனே எரவாடா சிறையில் சிறைவாசம் அனுபவித்து வந்த அவர், தண்டனை காலம் முடிவடைவதற்கு 8 மாதத்துக்கு முன்பாக அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு தேவையில்லாமல் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக கூறி, புனேயை சேர்ந்த ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
நன்னடத்தை, ஒழுக்கம்
இதனை விசாரித்த ஐகோர்ட்டு, மாநில அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது. இதன்பேரில், மாநில அரசு சார்பில் நேற்று ஐகோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-
மராட்டிய சிறை விதிமுறைகள்படி, கைதிகளின் நன்னடத்தை, ஒழுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது. சஞ்சய் தத் வழக்கை பொறுத்தமட்டில், அவர் 256 நாட்கள் அதாவது 8 மாதம் 16 நாட்கள் விடுப்பு பெற தகுதிபெற்றவர். இதன் அடிப்படையிலேயே அவர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தள்ளிவைப்பு
அத்துடன், ஏற்கனவே ஒருமுறை சஞ்சய் தத், மன்னிப்பு கோரி சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்ததாகவும், அதனை சிறைத்துறை நிராகரித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை பரிசீலித்த நீதிபதிகள் ஆர்.எம்.சாவந்த் மற்றும் சாதனா ஜாதவ், வழக்கை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story