சென்னை மாநகராட்சிக்கு 8½ லட்சம் பேர் ரூ.141 கோடி சொத்து வரி செலுத்தவில்லை
சென்னை மாநகராட்சிக்கு 8½ லட்சம் பேர் ரூ.141 கோடி சொத்து வரி பாக்கி வைத்து உள்ளனர்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு நிதி ஆண்டும் 2 அரையாண்டுகளாக (ஏப்ரல், அக்டோபர்) பிரிக்கப்பட்டு சொத்துவரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிகளை ஒவ்வொரு அரை நிதி ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் கட்டிவிட வேண்டும் என்பது மாநகராட்சி சட்டம் ஆகும்.
சொத்துவரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ‘வாரண்டு நோட்டீசு’ வழங்கியும், அதனைத்தொடர்ந்து ‘தண்டோரா’ அடித்தும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதன்பின்னரும் வரி செலுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் கட்டிடங்களை ‘சீல்’ வைத்து இறுதி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ‘ஜப்தி’ நடவடிக்கையையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரூ.141 கோடி
இந்த நிதி ஆண்டுக்கான முதல் அரையாண்டு (ஏப்ரல்-செப்டம்பர்) கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கியது. சென்னை மாநகரில் சொத்து உரிமையாளர்கள் 12 லட்சத்து 3 ஆயிரத்து 887 பேர் உள்ளனர். இதில் 4-ல் ஒரு பங்கினரே வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் சொத்துவரி செலுத்துகின்றனர்.
இந்த அரையாண்டுக்கான சொத்துவரி நிலுவைத்தொகையாக ரூ.325 கோடி (நிதியாண்டின் மொத்த நிலுவைத்தொகை ரூ.650 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 3½ லட்சம் பேர் தங்களுக்குரிய சொத்து வரியை முறையாக செலுத்திவிட்டனர். பலர் தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை மாநகராட்சிக்கு ரூ.184 கோடி சொத்துவரி வசூலாகி இருக்கிறது. இன்னும் ரூ.141 கோடி நிலுவைத்தொகையாகவே இருக்கிறது. எனவே நிலுவையில் உள்ள அத்தொகையை இந்த அரையாண்டு இறுதிக்குள் அதாவது வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வசூலித்து விட வேண்டும் என்று மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
8½ லட்சம் பேர்
கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர், மண்டல வருவாய் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுவரை எடுத்த விவரங்கள் அடிப்படையில் சென்னை மாநகரில் 8½ லட்சம் பேர் சொத்துவரி செலுத்தாதோர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். அவர்களின் பெயர், சொத்து விவரங்கள் மற்றும் நிலுவைத்தொகை மண்டல வாரியாக பட்டியலிடப்பட்டு உள்ளன.
எனவே இவர்களுக்கு முறையான அறிவிப்புகளை வழங்கி நிலுவைத்தொகையை உடனடியாக வசூலித்திட வேண்டும் என்று கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக பெரும் அளவில் சொத்துவரி நிலுவைத்தொகை வைத்திருப்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதுகுறித்த கள ஆய்வில் வரி மதிப்பீட்டாளர்கள் மற்றும் கணக்காளர்களை தீவிரமாக ஈடுபடுத்த மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.
2 மாதங்களுக்குள்...
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் சொத்துவரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, அடுத்த 2 மாதங்களுக்குள் நிலுவைத்தொகை முழுவதையும் வசூலித்து விடவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் மண்டல வாரியாக நிலுவைத்தொகை பட்டியல் தயாராகி வருகிறது. அந்த பட்டியல் தயாரான அடுத்த நிமிடமே அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி விடுவோம். எனவே ‘ஜப்தி’ உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில், சொத்துவரி செலுத்தாமல் உள்ளவர்கள் உடனடியாக தங்கள் நிலுவைத்தொகையை மாநகராட்சிக்கு செலுத்தி கொள்ளலாம்’, என்றார்.
Related Tags :
Next Story