மகதாயி நதிநீர் பிரச்சினை: முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு கோவா மந்திரி பதில் கடிதம்
மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக முதல்–மந்திரி சித்தராமையா எழுதிய கடிதத்திற்கு கோவா மந்திரி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக முதல்–மந்திரி சித்தராமையா எழுதிய கடிதத்திற்கு கோவா மந்திரி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் கோர்ட்டுக்கு வெளியே பிரச்சினையை தீர்த்துக்கொள்ள தயாராக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
மகதாயி நதிநீர் பிரச்சினைமகதாயி நதிநீர் பிரச்சினை கர்நாடகம், கோவா, மராட்டியம் ஆகிய மாநிலங்கள் இடையே உள்ளது. இது தொடர்பான விசாரணை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட மாநிலங்கள் கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாமே என்று நடுவர் மன்றம் ஆலோசனை கூறியது.
அதன் அடிப்படையில் மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்–மந்திரி சித்தராமையா, கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கடிதம் எழுதினார். சித்தராமையாவின் இந்த கடிதத்திற்கு கர்நாடக நீர்வளத்துறை மந்திரி வினோத் பல்யாகர் நேற்று ஒரு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
தயாராக இல்லைகர்நாடகத்துடன் உள்ள மகதாயி நதிநீர் பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்த்துக்கொள்ள கோவா மாநில அரசு தயாராக இல்லை. நதிநீர் விஷயத்தில் சமரசத்திற்கு இடம் இல்லை. இது தான் கோவா நீர்வளத்துறையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஆகும். கர்நாடகம் ஒருபுறம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என்று எங்கள் முதல்–மந்திரிக்கு கடிதம் எழுதுகிறது. ஆனால் அதற்கு பின்னால் கர்நாடகம் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறது.
நடுவர் மன்ற விசாரணையின்போது கர்நாடகத்தின் உண்மை நிலை சரியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எங்கள் அரசு சார்பில் ஆஜராகி வாதிடும் வக்கீல் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் கோவாவின் நலனை காக்க எங்கள் அரசு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.