பல்வேறு பிரச்சினைகளை மூடிமறைக்கவே மாநில அரசு கொடி விஷயத்தை கையில் எடுத்துள்ளது குமாரசாமி பேட்டி
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
நமது அரசியல் சாசனத்தில் மாநிலங்கள் தனியாக கொடியை வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. இந்த அரசு பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. இதை மூடிமறைக்கவே கொடி விஷயத்தை மாநில அரசு கையில் எடுத்துள்ளது. இப்போது கர்நாடக கொடியை உருவாக்க குழு அமைக்க வேண்டிய அவசியம் என்ன?. நாம் தேசிய கொடியை தான் பயன்படுத்துகிறோம்.
சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தேவேகவுடா அவசரமாக டெல்லி சென்றார். அந்த கூட்டம் இன்று(நேற்று) நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சில மாவட்டங்களில் அதிக பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு ஆகிய மாவட்டங்களில் அதிகம் பேர் டிக்கெட் கேட்கிறார்கள்.
இவர்களில் ஒருவரை வேட்பாளராக தேர்ந்தெடுக்க முயற்சி செய்து வருகிறோம். இன்னும் 4, 5 நாட்களில் எங்கள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.