புதிய தலைமுறை வாக்காளர்களை 100 சதவீதம் சேர்ப்பதே நோக்கம்
18 முதல் 21 வயதுவரை உள்ள புதிய தலைமுறை வாக்காளர்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
வேலூர்,
புதிய தலைமுறை வாக்காளர்களான 18 முதல் 21 வயதுவரை உள்ளவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் சேர்ப்பதே சிறப்பு முகாமின் நோக்கம் என்று கலெக்டர் ராமன் பேசினார்.
18 முதல் 21 வயதுவரை உள்ள புதிய தலைமுறை வாக்காளர்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமுக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் நாராயணன், உதவி கலெக்டர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியை மேரிசரல் வரவேற்றார். கலெக்டர் ராமன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் பெரும்பாலும் இடம்பெறவில்லை. அவர்கள் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு காரணமாக வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்றுவிடுவதால் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதில்லை. அதனை சரிசெய்யும் வகையில், 18 முதல் 21 வயதுவரை உள்ள இளைஞர்களான புதிய தலைமுறை வாக்காளர்களை 100 சதவீதம் வாக்காளர் பட்டியிலில் சேர்க்க சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.இந்த முகாம் ஜூலை 1–ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆன்–லைன் மூலம் பெயர் சேர்க்க 2 இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பெயர் சேர்க்க ஒன்று. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பெயர்சேர்க்க ஒன்று. இந்த இணையதளத்திலும் பெயர் சேர்க்கலாம். 18 முதல் 21 வயதுவரை உள்ள புதிய தலைமுறை வாக்காளர்கள் பெயரை 100 சதவீதம் சேர்ப்பதே இந்த சிறப்பு முகாமின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து மாணவ– மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தையும் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ரீகாந்த், பேராசிரியர்கள், மாணவ– மாணவிகள் கலந்துகொண்டனர்.