செல்போனில் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டும் கணவரை கைது செய்ய வேண்டும் டி.ஐ.ஜி.யிடம், இளம்பெண் மனு


செல்போனில் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டும் கணவரை கைது செய்ய வேண்டும் டி.ஐ.ஜி.யிடம், இளம்பெண் மனு
x
தினத்தந்தி 20 July 2017 2:30 AM IST (Updated: 20 July 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டும் எனது கணவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரிடம், இளம்பெண் மனு கொடுத்தார்.

நெல்லை,

செல்போனில் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டும் எனது கணவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரிடம், இளம்பெண் மனு கொடுத்தார்.

இளம்பெண் மனு

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த தினேஷ் என்பவரின் மனைவி சித்ரா (வயது 24). இவர் நேற்று தனது உறவினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எனக்கும், இட்டமொழியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே எனது கணவருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது. இதை தெரிந்து கொண்ட என்னை, கணவரின் உறவினர்கள் பட்டினி போட்டு கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினார்கள்.

இது தொடர்பாக வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. எனது கணவரையும், அவரது குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே, எனது கணவர் செல்போனில் தொடர்பு கொண்டு என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டி வருகிறார். எனவே எனது கணவரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பொய் வழக்கு

திசையன்விளையை அடுத்து கரைச்சுற்றுபுதூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த முத்து என்பவர் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனது மகன் ஆறுமுக செல்வன். மாற்றுத்திறனாளி. தொழில்போட்டி காரணமாக எனது மகனை சிலர் தாக்கினர். ஆனால் அவரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், எனது மகன் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனது மகன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story