வாழைத்தோட்டம் கால்வாயை வனத்துறையினர் மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சி


வாழைத்தோட்டம் கால்வாயை வனத்துறையினர் மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 July 2017 3:45 AM IST (Updated: 20 July 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக வாழைத்தோட்டம் கால்வாயை வனத்துறையினர் மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மசினகுடி,

மசினகுடி பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பஜ்ஜி மிளகாய், வாழை, மஞ்சள், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். ஆண்டிற்கு 2 பருவங்களில் மட்டுமே விவசாயம் செய்யும் இந்த விவசாயிகளுக்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சீகூர் ஆற்றின் குறுக்கே பொதுப்பணி துறை சார்பாக தடுப்பணை கட்டப்பட்டது. பின்னர் இந்த தடுப்பணையில் இருந்து பல கோடி ரூபாய் செலவில் பாசன கால்வாய் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த கால்வாய் விவசாய நிலங்களின் வழியாக செல்வதால் விவசாயிகள் பெரும் பயன் பெற்று வருகின்றனர். கோடை காலத்தில் மட்டும் இந்த கால்வாயில் தண்ணீர் வருவது கிடையாது. இதனால் கோடை காலத்தில் விவசாயம் செய்வதில்லை.

பருவமழை பெய்த பிறகு அந்த கால்வாயில் தண்ணீர் வந்தவுடன் மீண்டும் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல் மழை பெய்து வாழைத்தோட்டம் கால்வாயில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது பீன்ஸ், பஜ்ஜி மிளகாய், பாகற்காய், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு உள்ளனர். பயிரிட்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் சிங்காரா வனத்துறையினர் வாழைத்தோட்டம் கால்வாயை திடீரென மூடினார்கள். பின்னர் கால்வாயில் ஓடிய தண்ணீரை வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக சீகூர் ஆற்றில் திருப்பி விட்டு உள்ளனர். வனத்துறையினரின் இந்த செயல் வாழைத்தோட்டம் விவசாயிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து வாழைத்தோட்டம் விவசாயிகள் கூறியதாவது:– வாழைத்தோட்டம் விவசாயிகளுக்காக தடுப்பணை கட்டப்பட்டு கால்வாய் மூலம் பல ஆண்டுகளாக தண்ணீர் விடப்பட்டு வருகிறது. இதனை நம்பி தான் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் வனத்துறையினர் திடீரென விவசாயிகளுக்கு வரும் தண்ணீரை வனவிலங்குகளுக்காக திறந்து விட்டு உள்ளனர். இதனால் நாங்கள் பயிரிட்டுள்ள காய்கறிகள் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாழைத்தோட்டம் பாசன கால்வாயில் நிறுத்தப்பட்ட தண்ணீரை மீண்டும் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story